கரூர் கூட்ட நெரிசல் மரணம்: தவெக புள்ளிகளுக்கு சம்மன் அனுப்பிய சிபிஐ! டெல்லிக்கு பறக்கும் தலைகள்! பரபர பனையூர்!
Karur stampede death CBI summons Tvk points Heads flying to Delhi Parapara Panayur
கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த வழக்கில் விசாரணை தீவிரமடைந்துள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) முக்கிய மாநில நிர்வாகிகளுக்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது. தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், தேர்தல் பிரச்சார மேலாண்மைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா, இணைப் பொதுச்செயலாளர் சி.டி.ஆர். நிர்மல் குமார், கரூர் மாவட்டச் செயலாளர் மதியழகன் உள்ளிட்ட எட்டு பேரை டிசம்பர் 29ஆம் தேதி டெல்லி சிபிஐ அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி கரூர் வேலுச்சாமிபுரத்தில் நடைபெற்ற தவெக பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட கடும் கூட்ட நெரிசல் காரணமாக 41 பேர் உயிரிழந்தனர். இதில் பெண்கள் மற்றும் குழந்தைகள் அதிகளவில் பாதிக்கப்பட்டது மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் 110க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த விபத்துக்குக் காரணமான பாதுகாப்பு குறைபாடுகள், கூட்ட நிர்வாகத்தில் ஏற்பட்ட தவறுகள் குறித்து அப்போது பல்வேறு கேள்விகள் எழுந்தன.
உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் முதலில் தமிழ்நாடு காவல்துறை ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழு சம்பவ இடத்தை ஆய்வு செய்து, மின்வாரியம், மருத்துவத்துறை, பொதுப்பணித்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலரிடமிருந்து விளக்கங்களை பெற்றது. தவெக நிர்வாகிகள் சிலரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. பின்னர், இந்த வழக்கை முழுமையாக சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை உச்ச நீதிமன்றத்தில் ஏற்கப்பட்டதையடுத்து, சிபிஐ விசாரணை தொடங்கியது.
சிபிஐ அதிகாரி பிரவீன் குமார் தலைமையிலான சிறப்பு குழு தற்போது கரூரில் விசாரணை நடத்தி வருகிறது. இந்த விபத்து காவல்துறை பாதுகாப்பு குறைபாடுகளால் ஏற்பட்டதா அல்லது கூட்டத்தை ஒருங்கிணைத்த தவெக நிர்வாகிகளின் திட்டமிடல் தவறுகளா என்பதைக் கண்டறிவதே விசாரணையின் முக்கிய நோக்கமாக உள்ளது. நிகழ்ச்சி நடத்த அனுமதி பெற்ற ஆவணங்கள், பாதுகாப்பு ஏற்பாடுகள், கூட்டக் கட்டுப்பாடு திட்டங்கள் உள்ளிட்ட அனைத்தும் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.
இதற்கிடையில், உச்ச நீதிமன்றத்தின் கண்காணிப்பின் கீழ் ஓய்வுபெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் குழுவும் சம்பவ இடத்தை நேரில் ஆய்வு செய்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளிடமிருந்து வாக்குமூலங்களை பதிவு செய்துள்ளது.
இந்தச் சூழலில், தற்போது தவெக மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகளுக்கு நேரடியாக சிபிஐ சம்மன் அனுப்பப்பட்டுள்ளது முக்கிய திருப்பமாக பார்க்கப்படுகிறது. கூட்டம் நடைபெற்ற நாளில் பாதுகாப்பு ஏற்பாடுகள், கூட்ட நிர்வாகம், திட்டமிடல் நடைமுறைகள் குறித்து விரிவான விளக்கம் அளிக்க வேண்டும் என சிபிஐ அறிவுறுத்தியுள்ளது.
மேலும், மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகளின் விசாரணை முடிந்த பிறகு, தவெக தலைவர் விஜயிடமும் விசாரணை நடத்த சிபிஐ திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜனவரி முதல் வாரத்தில் விஜய்க்கு சம்மன் அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அதேபோல், கரூர் மாவட்ட எஸ்பி ஜோஷ் தங்கையா, ஏடிஎஸ்பி பிரேம் ஆனந்தன், டிஎஸ்பி செல்வராஜ், ஆய்வாளர் மணிவண்ணன் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகளுக்கும் டிசம்பர் 29ஆம் தேதி டெல்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் அரசியல் ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் பெரும் விவாதமாக மாறியுள்ள நிலையில், சிபிஐ விசாரணையின் அடுத்தடுத்த கட்ட நடவடிக்கைகள் தமிழக அரசியல் களத்தில் கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
Karur stampede death CBI summons Tvk points Heads flying to Delhi Parapara Panayur