கரூர் கூட்ட நெரிசல்: ஆம்புலன்ஸ் டிரைவர்களை தாக்கிய தவெகவினர் மீது மேலும் ஒரு வழக்கு பதிவு! வலை வீசி தேடும் போலீஸ்!
Karur stampede Another case registered against the Thavekas who attacked ambulance drivers Police are searching in a net
கரூரில் நடைபெற்ற விஜய்யின் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல், தமிழகத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்த சம்பவத்தில் பெண்கள் 17 பேர், குழந்தைகள் 10 பேர் உள்பட மொத்தம் 40 பேர் உயிரிழந்தனர், மேலும் 40க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
ஏற்கனவே, இந்த துயரச் சம்பவம் தொடர்பாக தவெக பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த், நிர்மல் குமார், கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழன் உள்ளிட்டோருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. இதேசமயம், ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒருநபர் விசாரணை ஆணையம் சம்பவத்தை விசாரித்து வருகிறது.
இதற்கிடையில், ஆம்புலன்ஸ் டிரைவர்களை தாக்கி, சாவிகளை பிடுங்கி, ஆம்புலன்ஸை சேதப்படுத்திய தவெகவினர் மீது மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் அளித்த புகாரின் அடிப்படையில், கரூர் நகர காவல்துறையினர் தாக்குதல் நடத்துதல் மற்றும் பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.சம்பவ இடத்தில் பதிவான வீடியோ காட்சிகளின் அடிப்படையில், தாக்குதலில் ஈடுபட்டவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து, ஆம்புலன்ஸ் டிரைவர் கார்த்திக் கூறியதாவது:“நாங்கள் வேலூர், வேளாங்கன்னி பகுதிகளில் இருந்து அவசர அழைப்பை ஏற்று கரூருக்கு வந்தோம். ஆனால் அங்கு சென்றவுடன் சிலர் எங்களிடம் சாவிகளை பிடுங்கி, அடித்து, ஆம்புலன்ஸை சேதப்படுத்தினர். உயிருக்கு போராடிக் கொண்டிருந்தவர்களை காப்பாற்ற விரைந்திருந்தோம். ஆனால், போலீசின் தடை முயற்சியையும் மீறி எங்களை தாக்கினர். இதனால் மூன்று ஆம்புலன்ஸ் டிரைவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.”
இந்த சம்பவம், ஏற்கனவே உயிரிழப்பால் துயரத்தில் மூழ்கிய கரூரில் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறை தீவிர விசாரணையில் ஈடுபட்டு, குற்றவாளிகளை விரைவில் கைது செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது.
English Summary
Karur stampede Another case registered against the Thavekas who attacked ambulance drivers Police are searching in a net