"அதிமுகவை இந்த நிலைக்கு கொண்டு வந்ததே டிடிவி தினகரன்"!ஒன்றுமில்லாமல் போன அதிமுக! – மாணிக்கம் தாகூர் விமர்சனம்
It was TTV Dhinakaran who brought the AIADMK to this state AIADMK reduced to nothing Manickam Tagore criticism
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவராக பொறுப்பேற்றுள்ள மாணிக்கம் தாகூர், மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, மாநில அரசியல், கூட்டணி, பாஜக மற்றும் அதிமுக குறித்து பல்வேறு கருத்துகளைத் தெரிவித்தார். குறிப்பாக, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மீது அவர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.
மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மாணிக்கம் தாகூர், தன்னை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக நியமித்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு நன்றி தெரிவித்தார்.
தமிழகத்தில் பல தசாப்தங்களுக்குப் பிறகு காங்கிரஸ் மீண்டும் ஆட்சியில் பங்குபெற்றுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், தற்போதைய அமைச்சரவையில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இரண்டு அமைச்சர்கள் இடம்பெற்றிருப்பது முக்கிய முன்னேற்றம் என்றார். வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் ராகுல் காந்தியை பிரதமராக்க வேண்டும் என்பதே காங்கிரஸின் முக்கிய இலக்கு என்றும் தெரிவித்தார்.
முதல்வர் விஜயின் செயல்பாடுகள் குறித்து கருத்து தெரிவித்த அவர், "ஒவ்வொரு தமிழருக்குமான அரசியலை முன்னெடுத்து செல்லும் முயற்சியில் முதலமைச்சர் விஜய் செயல்பட்டு வருகிறார். அந்த அரசியல் வெற்றியடைவது எங்களுடைய வெற்றியாகவும் இருக்கும்" என்று கூறினார்.
மேகதாது அணை திட்டம் தொடர்பாக பேசிய மாணிக்கம் தாகூர், மத்திய அரசின் அனுமதி இல்லாமல் கர்நாடக அரசு அந்தத் திட்டத்தை முன்னெடுக்க முடியாது என்றும், தமிழக நலனில் மத்திய அரசு உரிய நிலைப்பாடு எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
அதேபோல், ராமர் கோவில் நிதி தொடர்பாக வெளியான தகவல்களை குறிப்பிட்ட அவர், அந்த விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி இதுவரை விளக்கம் அளிக்கவில்லை என்று குற்றம்சாட்டினார். இந்த விவகாரத்தை நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் எழுப்பும் என்றும் தெரிவித்தார்.
இதையடுத்து டிடிவி தினகரன் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த மாணிக்கம் தாகூர், "டிடிவி தினகரன் அதிமுகவை ஒன்றும் இல்லாமல் ஆக்கும் வேலையில்தான் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். அதே அக்கறையை அதிமுகவை ஒருங்கிணைப்பதில் காட்டியிருந்தால், எம்.ஜி.ஆர். தொடங்கி ஜெயலலிதா வரை வளர்த்துக் காத்த கட்சி இன்று இந்த நிலைக்கு வந்திருக்காது" என்று விமர்சித்தார்.
மேலும், "அதிமுகவை அழிவின் பாதைக்கு அழைத்துச் சென்றதில் டிடிவி தினகரனுக்கும் முக்கியப் பங்கு இருக்கிறது. முதலில் அதிமுகவை ஒருங்கிணைக்கும் பணியில் அக்கட்சியினர் கவனம் செலுத்த வேண்டும். அதன் பிறகே மற்ற அரசியல் கூட்டணிகள் குறித்து பேசலாம்" என்றும் அவர் தெரிவித்தார்.மாணிக்கம் தாகூரின் இந்த கருத்துகள், தமிழக அரசியல் வட்டாரங்களில் புதிய விவாதங்களை ஏற்படுத்தியுள்ளன.
English Summary
It was TTV Dhinakaran who brought the AIADMK to this state AIADMK reduced to nothing Manickam Tagore criticism