இது சட்டசபையா... சினிமா செட்டா...? - சட்டமன்றத்தை சூட்டிங் ஸ்பாட்டாக மாற்றுவதாக தவெக அரசை வறுத்தெடுத்த ஜெயக்குமார்...!
Is this assembly cinema set Jayakumar criticized tvk government turning assembly shooting spot
அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தனது எக்ஸ் தளப் பதிவின் மூலம் தமிழக முதல்-அமைச்சர் விஜயை கடுமையாக விமர்சித்து கருத்து தெரிவித்துள்ளார்.
அவர் பதிவில், “சார்... நான் ஒரு ஆக்ஷன் பண்ணிக்கலாமா?” என்று தொடங்கி, திரைப்பட பாணியிலான விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.“‘நாளைய தீர்ப்பு’ திரைப்பட காலத்திலிருந்து இன்று மக்கள் வாக்கால் முதல்-அமைச்சர் பதவியை அடைந்திருக்கும் வரை விஜய்யின் நடிப்பு திறன் கணிசமாக வளர்ந்துள்ளது.

அதற்கு வாழ்த்துகள்,” என்று குறிப்பிட்ட அவர், அதே நேரத்தில் சட்டமன்றத்தின் செயல்பாடுகள் குறித்து கடும் அதிருப்தியையும் வெளிப்படுத்தினார்.மேலும், பஞ்ச் வசனங்கள் பேசுவது, விசில் அடிக்கச் செய்வது, குட்டிக்கதைகள் சொல்லுவது போன்ற செயல்கள் சட்டமன்றத்தின் கண்ணியத்தை பாதிப்பதாக அவர் சாடினார்.
தமிழ்நாடு சட்டசபையை விவாத அரங்கமாக அல்லாமல், படப்பிடிப்பு தளமாக மாற்றுவது மாநிலத்திற்கு நல்லதல்ல என்றும் அவர் குறிப்பிட்டார்.“5 நிமிடம் பேசினதுக்கே என்னாச்சு தெரியும்ல” என்று பஞ்ச் வசனம் பேசும் முதல்-அமைச்சரே, அதையே நாங்களும் உங்களிடம் கேட்கிறோம் என்று ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
மின்வெட்டு பிரச்சனை, விவசாயிகளின் துயரம், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள், சட்டம்-ஒழுங்கு சீர்கேடு மற்றும் தேர்தலின்போது வழங்கப்பட்ட வாக்குறுதிகள் குறித்து குறைந்தபட்சம் 5 நிமிடங்களாவது தீவிரமாக பேச வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இறுதியாக, சமூக வலைதள ரீல்ஸ் மற்றும் மேடை வசனங்களைத் தாண்டி, மக்களின் உண்மை பிரச்சனைகளை நேருக்கு நேர் சந்திக்கும் அரசியல் யதார்த்தத்திற்கு வர வேண்டும் என முதல்-அமைச்சர் விஜய்க்கு ஜெயக்குமார் நேரடி சவால் விடுத்துள்ளார்.
English Summary
Is this assembly cinema set Jayakumar criticized tvk government turning assembly shooting spot