ஏழை எளியோரின் சமையல் பட்ஜெட்டை சிதைப்பதா...? - சிலிண்டர் விலை உயர்வுக்கு எதிராக சீமான் கண்டனம்...! - Seithipunal
Seithipunal


வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை இந்திய ஒன்றிய அரசு 29 ரூபாய் உயர்த்தியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், எந்தவித முன்னறிவிப்பும் இன்றி சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை உயர்த்தியிருப்பது, ஏற்கனவே பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் ஏழை மற்றும் நடுத்தர மக்களின் வாழ்வை மேலும் சுமையாக்கும் இரக்கமற்ற நடவடிக்கை என சாடியுள்ளார்.

பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் அத்தியாவசியப் பொருட்களின் விலையும் கட்டுக்கடங்காத அளவிற்கு அதிகரித்துள்ளது. நாளுக்கு நாள் உயர்ந்து வரும் விலைவாசிச் சுமையால் மக்கள் திணறி வரும் நிலையில், சமையல் எரிவாயு சிலிண்டர் விலையையும் உயர்த்துவது கோடிக்கணக்கான குடும்பங்களின் வாழ்வாதாரத்தை நேரடியாக பாதிக்கும் கொடுமையான செயலாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், வாகன எரிபொருட்களின் விலை நிர்ணய அதிகாரத்தை தனியார் எரிஎண்ணெய் நிறுவனங்களிடம் ஒப்படைத்த முந்தைய ஆட்சியாளர்களின் கொள்கை முடிவுகளே இன்று மக்கள் அனுபவிக்கும் பொருளாதார நெருக்கடிக்கு அடிப்படை காரணம் என்றும் தெரிவித்துள்ளார்.

ஒருகாலத்தில் 1,200 ரூபாய் வரை விற்பனையான சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை, நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு மட்டுமே 1,000 ரூபாய்க்குக் கீழ் குறைக்கப்பட்டதாகவும், தற்போது மீண்டும் அந்த விலையை உயர்த்துவதற்கான முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டிருப்பது மக்களை ஏமாற்றும் செயலாகும் என்றும் விமர்சித்துள்ளார்.

எனவே, சமீபத்தில் அறிவிக்கப்பட்டுள்ள சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை இந்திய ஒன்றிய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்றும், எரிபொருள் விலை நிர்ணய அதிகாரத்தை மீண்டும் அரசின் நேரடி கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அதேநேரத்தில், இந்த விலை உயர்வின் தாக்கத்திலிருந்து தமிழ்நாட்டு மக்களை பாதுகாக்கும் வகையில், தமிழ்நாடு அரசு தனது தேர்தல் வாக்குறுதியின்படி அனைத்து குடும்பங்களுக்கும் ஆண்டுக்கு 6 சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கான முழுச் செலவையும் ஏற்கும் திட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் சீமான் கேட்டுக்கொண்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Is it destroying cooking budget poor and needy Seeman condemns increase cylinder prices


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




Seithipunal
--> -->