விஜய்யை சிக்க வைக்கப் பார்க்கிறதா பாஜக?பிரதமர் மோடி வருகை தமிழக அரசியல், ஆட்சியில் மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன் - Seithipunal
Seithipunal


வரும் 23ஆம் தேதி பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வருவது அரசியலிலும் ஆட்சியிலும் மாற்றத்தை ஏற்படுத்தும் என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். நடிகர் விஜய்க்கு எதிரான சிபிஐ விசாரணைக்கு பாஜக காரணம் என்றும், பாஜக பாரபட்சமாக நடந்து கொள்கிறது என்றும் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை கூறியிருப்பதில் எந்த அர்த்தமும் இல்லை என்றும் அவர் விமர்சித்துள்ளார்.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே உள்ள யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழாவில் கலந்து கொண்ட தமிழிசை சௌந்தரராஜன், கோ பூஜை செய்து மாணவிகளுடன் புதுப் பானையில் பொங்கல் வைத்து விழாவை கொண்டாடினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்தியா மிக வேகமாக வளர்ச்சி அடைந்து வருவதாகக் கூறினார்.

அமெரிக்க தூதர் சமீபத்தில் இந்தியாவிற்கு வந்தது நாட்டின் பெருமையை வெளிப்படுத்துகிறது என்றும், இந்தியாவைப் போல வளர்ச்சி அடைந்த நாடு உலகத்தில் இல்லை என்று வெளிநாடுகளே பாராட்டும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். மேலும் பாதுகாப்பு துறையில் இந்தியா முன்னேற்றம் அடைந்துள்ளதாகவும், எதிரிகளின் பீரங்கிகளை நேரடியாக தாக்கும் புதிய கருவிகளை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) தயாரித்திருப்பது நாட்டின் வளர்ச்சிக்கான சான்று என்றும் கூறினார்.

“தை பிறந்தால் வழி பிறக்கும்” என்ற பழமொழிக்கேற்ப, தமிழகத்திற்கும் நல்ல வழி பிறப்பதற்காக ஜனவரி 23ஆம் தேதி நடைபெற உள்ள பிரதமர் மோடியின் வருகை ஒரு அடித்தளமாக அமையும் என்றும், அந்த வருகை அரசியல் மாற்றத்தோடு ஆட்சியிலும் மாற்றத்தை உருவாக்கும் என்ற நம்பிக்கை இருப்பதாக தமிழிசை தெரிவித்தார்.

டபுள் இன்ஜின் ஆட்சி இருக்கும் ஆந்திராவில் வளர்ச்சி வேகமாக நடைபெற்று வருவதாகவும், மசூலிப்பட்டினம் துறைமுகம், நெல்லூர் விமான நிலையம் போன்ற பெரிய திட்டங்கள் மத்திய அரசுடன் இணைந்து செயல்படுவதால் சாத்தியமாகியுள்ளது என்றும் அவர் எடுத்துக்காட்டினார். அதேபோல் தமிழ்நாட்டிலும் மத்திய – மாநில அரசுகள் இணைந்து செயல்பட்டால் இன்னும் அதிக வளர்ச்சி பெற முடியும் என்றும் கூறினார். தமிழகம் வளர்ச்சி அடைந்துவிட்டதாக சொன்னாலும் பல தளங்களில் இன்னும் பின்தங்கியே இருப்பதாகவும், முன்னேற வேண்டும் என்ற ஆவல் அனைவருக்கும் இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

பெண்கள் முன்னேற்றம் குறித்து பேசும் தமிழக அரசு, அங்கன்வாடி ஊழியர்களை தொடர்ந்து போராட்டத்தில் வைத்திருப்பது சரியல்ல என்றும், இதற்கு அரசு கவனம் செலுத்த வேண்டும் என்றும் தமிழிசை சுட்டிக்காட்டினார். திருப்பரங்குன்றத்தில் பாஜக மூத்த தலைவர் எச். ராஜா கைது செய்யப்பட்டதையும் அவர் கடுமையாக கண்டித்தார். இந்துக்களுக்கு எதிராக தமிழக அரசு பாரபட்சமாக நடந்து கொள்வதை தவிர்க்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

நடிகர் விஜய்க்கு எதிரான சிபிஐ விசாரணைக்கு பாஜக காரணம் என செல்வப் பெருந்தகை கூறியிருப்பதை விமர்சித்த தமிழிசை, அதில் எந்த அர்த்தமும் இல்லை என்றும், இதுபோன்ற குற்றச்சாட்டுகளை விஜய்யோ அவரது ரசிகர்களோ கூறவில்லை என்றும் தெரிவித்தார். காங்கிரஸ் கட்சிக்குள் செல்வப் பெருந்தகையின் முக்கியத்துவம் குறைந்து வருவதால், தன்னை வெளிப்படுத்திக் கொள்ளவே இவ்வாறு பேசுகிறார் என்றும், இதில் “குளிர்காய” முயற்சி செய்கிறார் என்றும் அவர் விமர்சனம் செய்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Is BJP trying to trap Vijay Prime Minister Modi's visit will bring about a change in Tamil Nadu politics and governance Tamilisai Soundararajan


கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?



Advertisement

கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?


செய்திகள்



Seithipunal
--> -->