அமித்ஷா அன்று சொன்னதை செய்கிறாரோ! டெல்லி பிளான்!ஆந்திராவில் இருந்து ராஜ்யசபா எம்பியாகிறாரா அண்ணாமலை!
Is Amit Shah doing what he said that day Delhi plan Will Annamalai get Rajya Sabha seats from Andhra Pradesh
தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் கே.அண்ணாமலை மீண்டும் தேசிய அரசியலில் முக்கிய இடம் பெறக்கூடும் என்ற தகவல்கள் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக, ஆந்திரப் பிரதேசம் வழியாக ராஜ்யசபா உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு, பின்னர் மத்திய அமைச்சரவையில் இடம் பெறும் வாய்ப்பு அவருக்கு இருப்பதாக டெல்லி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவில் ஜூன் 21 மற்றும் ஜூலை 19 தேதிகளில் ஆந்திரா, குஜராத், கர்நாடகா உள்ளிட்ட பல மாநிலங்களில் காலியாகும் 24 ராஜ்யசபா இடங்களுக்கான தேர்தல் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் ஆந்திரப் பிரதேசத்தில் மட்டும் 4 இடங்கள் காலியாகின்றன.
தற்போது ஆந்திராவில் தெலுங்கு தேசம், ஜனசேனா மற்றும் பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டணியின் சார்பில் ராஜ்யசபா தேர்தலுக்கான வேட்பாளர்கள் நிறுத்தப்பட உள்ள நிலையில், அதில் ஒரு இடத்தை பாஜகவுக்கு ஒதுக்க வேண்டும் என்று டெல்லி மேலிடம் வலியுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
அதிலும், அந்த இடத்தில் தமிழகத்தைச் சேர்ந்த அண்ணாமலையை நிறுத்த வேண்டும் என்ற விருப்பத்தை பாஜக தேசிய தலைமையே கூட்டணி கட்சிகளிடம் தெரிவித்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழகத்தில் தீவிர அரசியல் செய்து வந்த அண்ணாமலையை, ஆந்திரா வழியாக நாடாளுமன்றத்திற்கு கொண்டு வருவது வெறும் எம்பி பதவிக்காக மட்டுமல்ல என்றும் அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். மாறாக, அவருக்கு தேசிய அளவில் முக்கிய பொறுப்பு அல்லது மத்திய அமைச்சரவை இடம் வழங்கப்படலாம் என்றே அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
தமிழக பாஜக தலைவராக இருந்த அண்ணாமலையின் பதவிக்காலம் முடிந்த பிறகு, அவருக்கு பதிலாக நயினார் நாகேந்திரன் மாநில தலைவராக நியமிக்கப்பட்டார். அதன்பிறகு அதிமுக – பாஜக கூட்டணியும் மீண்டும் உருவானது.
அந்த சமயத்தில் அண்ணாமலை குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, “அண்ணாமலைக்கு தேசிய அளவில் முக்கிய பொறுப்பு வழங்கப்படும்” என்று தெரிவித்திருந்தார். இதனால் அவருக்கு என்ன பதவி வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு பாஜக வட்டாரங்களில் உருவாகியது.
சட்டசபைத் தேர்தலில் அண்ணாமலைக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் தேர்தலில் களமிறங்கவில்லை. இதுகுறித்து பாஜக தரப்பில், “அண்ணாமலை தானாகவே வாய்ப்பு வேண்டாம் என்று தெரிவித்தார்” என கூறப்பட்டது.
இதற்கிடையில் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்கலாம் என்ற தகவல்களும் அரசியல் வட்டாரங்களில் பரவின. மேலும், அவர் விவசாயத்தில் ஈடுபடப் போவதாகவும், பால் பண்ணை தொடங்கத் திட்டமிட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியானது.
பாஜகவில் அண்ணாமலை தொடர்ந்து ஓரங்கட்டப்படுகிறார் என்ற விமர்சனங்கள் எழுந்து வந்த சூழலில், தற்போது அவரை ராஜ்யசபா வழியாக தேசிய அரசியலுக்கு கொண்டு வர பாஜக திட்டமிட்டு வருவதாக கூறப்படுவது மீண்டும் அவரது ஆதரவாளர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனால், “அண்ணாமலை விரைவில் டெல்லி அரசியலில் முக்கிய முகமாக மாறப் போகிறாரா?” என்ற கேள்வி தற்போது தமிழக அரசியல் வட்டாரங்களில் தீவிரமாக பேசப்பட்டு வருகிறது.
English Summary
Is Amit Shah doing what he said that day Delhi plan Will Annamalai get Rajya Sabha seats from Andhra Pradesh