தமிழகத்திற்கு குவியும் முதலீடுகள்...? முதல்வர் விஜய்யுடன் ஆக்சிஸ் வங்கி மேலாண்மை இயக்குநர் திடீர் சந்திப்பு...!
Investments pouring Tamil Nadu sudden meeting between Chief Minister Vijay and Axis Bank Managing Director
சென்னை தலைமைச் செயலகம் இன்று முக்கிய சந்திப்புகளின் மையமாக மாறியது. தமிழக முதல்-அமைச்சர் விஜயை வங்கி, மருத்துவம், தொழில் மற்றும் சர்வதேச உறவுகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் நேரில் சந்தித்து முக்கிய ஆலோசனைகள் மேற்கொண்டனர்.
இந்த தொடர் சந்திப்புகள் அரசியல் மற்றும் நிர்வாக வட்டாரங்களில் குறிப்பிடத்தக்க கவனத்தை ஈர்த்துள்ளன.இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,"ஆக்சிஸ் வங்கியின் மேலாண்மை இயக்குநரும் தலைமை செயல் அலுவலருமான அமிதாப் சவுத்ரி, வங்கியின் மூத்த நிர்வாகிகளுடன் சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் விஜயை சந்தித்து பேசினார்.

இந்த சந்திப்பின்போது நிதி வளர்ச்சி, முதலீட்டு வாய்ப்புகள் மற்றும் வங்கி சேவை விரிவாக்கம் தொடர்பான பல்வேறு அம்சங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.அதனைத் தொடர்ந்து, ரேலா மருத்துவமனையின் தலைவரும் மேலாண்மை இயக்குநருமான டாக்டர் முகமது ரேலா, முதல்-அமைச்சர் விஜயை சந்தித்து மருத்துவத் துறை முன்னேற்றம் தொடர்பாக கலந்துரையாடினார்.
இந்த சந்திப்பில் ரேலா மருத்துவமனையின் செயல் இயக்குநர் ஜி. ரமேஷ் கிருஷ்ணன், தலைமைச் செயல்பாட்டு அலுவலர் முகமது பாரூக் மற்றும் உயர்மட்ட நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.
மேலும், கரூர் ஜவுளி உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் பி. கோபாலகிருஷ்ணன், செயலாளர் எஸ். சுகுமார், துணைத்தலைவர் கே.ஜி. பிருத்வி உள்ளிட்ட நிர்வாகிகள் முதல்-அமைச்சர் விஜயை சந்தித்து ஜவுளித்துறை வளர்ச்சி, ஏற்றுமதி மேம்பாடு மற்றும் தொழில் சார்ந்த கோரிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டனர்.
இதனுடன், தென் இந்தியாவுக்கான இலங்கை துணைத் தூதர் டாக்டர் கணேசநாதன் கேதீஸ்வரனும் முதல்-அமைச்சர் விஜயை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்பின் போது இருதரப்பு உறவுகள், பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் பரஸ்பர நல்லுறவு தொடர்பான அம்சங்கள் குறித்து விரிவான கருத்துப் பரிமாற்றம் நடைபெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.இவ்வாறு வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Investments pouring Tamil Nadu sudden meeting between Chief Minister Vijay and Axis Bank Managing Director