'ஆபரேஷன் சிந்தூர்' இன்னும் முடிவடையவில்லை; இது வெறும் தொடக்கம்தான். முதலாம் ஆண்டு நிறைவில் இந்திய ராணுவம் உறுதி..!
Indian Army confirms on the first anniversary that Operation Sindoor has not yet concluded
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதற்கு பதிலடியாக, 'ஆபரேஷன் சிந்தூர்' ராணுவ நடவடிக்கையை இந்திய அரசு முன்னெடுத்தது. இந்த நடவடிக்கையில், பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன. 'ஆபரேஷன் சிந்தூர்' தொடங்கப்பட்டதன் முதலாம் ஆண்டை முன்னிட்டு உயர்மட்ட ராணுவத் தலைவர்கள் ஜெய்ப்பூரில் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
அப்போது, ஒருங்கிணைந்த பாதுகாப்புப் படைத் துணைத் தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் ஜுபில் ஏ. மின்வல்லா, லெப்டினன்ட் ஜெனரல் ராஜீவ் காய், ஏர் மார்ஷல் அவ்தேஷ் குமார் பாரதி, வைஸ் அட்மிரல் ஏ.என். பிரமோத் உள்ளிட்ட மூத்த ராணுவ அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
அப்போது பேசிய லெப்டினன்ட் ஜெனரல் ராஜீவ் காய், கூறியதாவது; ''பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் போராட்டம் இடைவிடாமல் தொடரும் என்பதை 'ஆபரேஷன் சிந்தூர்' நிரூபித்துள்ளது என்றும், ஆபரேஷன் சிந்தூரின் போது பாகிஸ்தான் 100-க்கும் மேற்பட்ட வீரர்களை இழந்தது. அதே நேரத்தில் இந்தியாவால் குறிவைக்கப்பட்ட ஒன்பது பயங்கரவாத முகாம்களில் 100-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் என்று குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், பாகிஸ்தான் பிரச்சாரத்திலும், கதை உருவாக்கத்திலும் முதலீடு செய்ததைப் போல, தனது போர்த் திறன்களை வலுப்படுத்துவதிலும் முதலீடு செய்திருந்தால், அதன் செயல்திறன் ஒருவேளை மிகவும் சிறப்பாக இருந்திருக்கும் என்று ஆவர் பாணியில் பாகிஸ்தானை கலாய்த்துள்ளார்.
மேலும், பாகிஸ்தானில் இனி எந்தப் பயங்கரவாதத் தளமும் பாதுகாப்பாக இல்லை என்பதை ‘ஆபரேஷன் சிந்தூர்’ உறுதிப்படுத்தியுள்ளது என்று குறிப்பிட்டுள்ளதோடு, பயங்கரவாதத்துக்கு எதிரான தனது போராட்டத்தைத் தொடரும் என்றும் உறுதிப்படுத்தியுள்ளார்.

அத்துடன் நாட்டின் பாதுகாப்பை உறுதிசெய்யத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் இந்தியா எடுக்கும் என்றும், 'ஆபரேஷன் சிந்தூர்' இன்னும் முடிவடையவில்லை; இது வெறும் தொடக்கம்தான். சத்தம் எழுப்புவது மட்டும் எங்கள் நோக்கமல்ல; சூழ்நிலையை மாற்றுவதே எங்கள் நோக்கம்' என திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
ஆபரேஷன் சிந்துரின் ஓராண்டு நிறைவையொட்டி ஆயுதப் படைகளுக்குப் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்திருந்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட சமூக ஊடக எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது;
''ஓராண்டுக்கு முன், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது நமது ஆயுதப் படைகள் ஈடு இணையற்ற துணிச்சலையும், துல்லியத்தையும், உறுதியையும் வெளிப்படுத்தின. பஹல்காமில் அப்பாவி இந்தியர்களைத் தாக்கத் துணிந்தவர்களுக்கு அவர்கள் தக்க பதிலடி கொடுத்தனர். நமது படையினரின் வீரத்திற்கு ஒட்டுமொத்த தேசமும் வணக்கம் செலுத்துகிறது.
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை, பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் உறுதியான பதிலடியையும், தேசியப் பாதுகாப்பைப் பேணுவதில் அதன் அசைக்க முடியாத அர்ப்பணிப்பையும் பிரதிபலித்தது. அது நமது ஆயுதப் படைகளின் தொழில்முறைத் திறன், தயார்நிலை மற்றும் ஒருங்கிணைந்த வலிமையையும் எடுத்துக்காட்டியது. இன்று, ஓராண்டுக்குப் பிறகும், பயங்கரவாதத்தைத் தோற்கடித்து, அதற்குத் துணைபுரியும் சூழலை அழிப்பதற்கான எங்கள் உறுதியில் முன்பைப் போலவே உறுதியாக இருக்கிறோம்'' என்று தெரிவித்துள்ளார்.
English Summary
Indian Army confirms on the first anniversary that Operation Sindoor has not yet concluded