"வாக்காளர் பட்டியல் முறைகேடு புகார்": தில்லியில் 'இந்தியா' கூட்டணி எம்பிக்கள் பிரம்மாண்ட பேரணி - தலைமைத் தேர்தல் ஆணையர் பதவி விலக வலியுறுத்தல்!
INDIA Alliance MPs March to Election Commission HQ Over Electoral Roll SIR Row Demand CEC Gyanesh Kumar Resignation
வாக்காளர் பட்டியலைச் சீரமைக்கத் தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வரும் சிறப்புத் தீவிர திருத்த (SIR) நடவடிக்கைகளில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாகக் கூறி, 'இந்தியா' கூட்டணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் தில்லியில் உள்ள தேர்தல் ஆணையத் தலைமை அலுவலகத்தை (நிர்வாச்சன் சதன்) நோக்கிப் பேரணியாகச் செல்கின்றனர்.
நாடாளுமன்றத்தில் இருந்து பேரணி: நாடாளுமன்ற வளாகத்தின் மகர் துவாரில் இருந்து காலை 10:30 மணியளவில் புறப்பட்ட இப்போராட்டப் பேரணி, நிர்வாச்சன் சதனில் உள்ள தேர்தல் ஆணையத் தலைமை அலுவலகத்தை நோக்கிச் செல்கிறது. இதில் காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் உட்படக் கூட்டணியின் முக்கிய தலைவர்கள் மற்றும் எம்பிக்கள் பங்கேற்றுள்ளனர்.
'படிவம் 6' சர்ச்சை & உச்ச நீதிமன்ற கருத்து: வாக்காளர் சேர்க்கைக்கான 'படிவம் 6'-இல் தன்னிச்சையாக மாற்றங்கள் செய்யப்பட்டு லட்சக்கணக்கான வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன. 'படிவம் 6'-இல் செய்யப்பட்ட மாற்றங்களுக்கு உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளிக்கவில்லை என்று தலைமை நீதிபதி தெரிவித்த கருத்து எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு மேலும் வலு சேர்த்துள்ளது.
ஆணையர்களிடையே கருத்து வேறுபாடு: தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மேற்கொண்ட இந்த சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு மற்ற இரு தேர்தல் ஆணையர்களான சுக்பீர் சிங் சாந்து மற்றும் விவேக் ஜோஷி ஆகியோர் கடந்த 10 மாதங்களில் 14 முறை தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தில்லியில் பலத்த பாதுகாப்பு: பேரணியை முன்னிட்டு சன்சத் மார்க், படேல் சவுக் மற்றும் அசோகா சாலைப் பகுதிகளில் விரைவு அதிரடிப் படையினரும் போலிஸாரும் அதிகளவில் குவிக்கப்பட்டுப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
'ஆம் ஆத்மி' விலகல்: இப்போராட்டத்தில் 'ஆம் ஆத்மி' கட்சி பங்கேற்கவில்லை என அறிவித்துள்ளது. வாக்காளர் பட்டியல் முறைகேடுகளுக்கு எதிராகத் தங்கள் கட்சி தனியாகத் தொடர் மக்கள் இயக்கப் போராட்டங்களை நடத்தி வருவதாக ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங் தெரிவித்துள்ளார்.
English Summary
INDIA Alliance MPs March to Election Commission HQ Over Electoral Roll SIR Row Demand CEC Gyanesh Kumar Resignation