தமிழகத்தில் 2027- மார்ச் மாதத்திற்கு பிறகே ஒரே நேரத்தில் ஊரக, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்த திட்டம்..!
In Tamil Nadu there is a plan to hold elections for both rural and urban local bodies simultaneously but only after March 2027
2027 மார்ச் மாதத்துக்குப் பிறகே தமிழகத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் வார்டு மறுவரையறை, புதிய உள்ளாட்சி அமைப்புகளை உருவாக்குதல், நகர்ப்புற அமைப்புகளுடன் கிராம ஊராட்சிகளை இணைத்தல் மற்றும் இடஒதுக்கீடு தொடர்பான பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்தப் பணிகள் முடிவடைந்த பின்னரே உள்ளாட்சி தேர்தலை நடத்த முடியும் என்பதால், தேர்தல் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்கு முன்பு நடைபெற வாய்ப்பில்லை கூறப்படுகிறது.
இதில், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருநெல்வேலி, தென்காசி ஆகிய 09 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம் கடந்த 19-ஆம் தேதியுடன் முடிவடைந்துள்ளது.
இதையடுத்து, இந்த மாவட்டங்களில் உள்ளாட்சி அமைப்புகளின் நிர்வாகத்தை கவனிக்க சிறப்பு அலுவலர்களை அரசு நியமித்துள்ளது. ஏற்கெனவே 28 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம் கடந்த ஆண்டு ஜனவரி மாதத்துடன் முடிவடைந்த நிலையில், அங்கு நியமிக்கப்பட்ட சிறப்பு அலுவலர்களின் பதவிக்காலம் 2027 ஏப்ரல் 19-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், 46 ஊரக உள்ளாட்சி அமைப்புகளை நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைக்கும் பணிகளும், விரிவாக்கப்பட்ட நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் எல்லைகளை வரையறுக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் மாவட்ட ஊராட்சிகளின் வார்டு எல்லைகளில் மாற்றங்கள் செய்ய வேண்டியுள்ளது. அதன்பிறகு வார்டு மறுவரையறை மற்றும் இடஒதுக்கீட்டுப் பணிகளை மேற்கொள்ள வேண்டியிருப்பதால் தேர்தலை உடனடியாக நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கைப் பணிகள், டிசம்பர் மாதம் வரை நடைபெறவுள்ளது. இதனால், இடைத்தேர்தல்கள் மற்றும் அடுத்த ஆண்டு பிப்ரவரியில் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ள மக்கள்தொகைக் கணக்கெடுப்புப் பணிகள் ஆகியவையும் தேர்தல் தாமதத்துக்குக் காரணங்களாகக் கூறப்படுகின்றன.
அத்துடன், தமிழக நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் ஐந்தாண்டு பதவிக்காலம் 2027 மார்ச் மாதத்தில் முடிவடையவுள்ளது. எனவே, ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த அரசு திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதுவரை கிராம ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் மாவட்ட ஊராட்சிகளின் நிர்வாகத்தை சிறப்பு அலுவலர்கள் தொடர்ந்து கவனிப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
In Tamil Nadu there is a plan to hold elections for both rural and urban local bodies simultaneously but only after March 2027