கட்சிச் சாயம் பூசமாட்டேன்...! - சபாநாயகர் இருக்கையில் அமர்ந்ததும் ஜே.சி.டி. பிரபாகர் அதிரடி உறுதிமொழி...!
I will not paint party color JCD Prabhakar made bold promise after sitting Speaker seat
17-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடர் நேற்று உற்சாகமான அரசியல் சூழலில் தொடங்கியது. சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற உறுப்பினர்கள் அனைவரும் அவையில் ஒன்றுகூடி, உறுப்பினர் பதவியேற்று உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். விஜய், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் சட்டமன்ற உறுப்பினர்களாக அதிகாரப்பூர்வமாக பதவியேற்றனர்.

அரசியல் பரபரப்புகள் சூழ்ந்த நிலையில், இன்று நடைபெற்ற அவை அமர்வில் முதற்கட்ட நிகழ்வாக சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் தேர்வு நடைபெற்றது. இதில் வேறு யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யாததால், ஜே.சி.டி.பிரபாகர் சபாநாயகராகவும், ரவிசங்கர் துணை சபாநாயகராகவும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து, அவை மரபுப்படி அவை முன்னவர் செங்கோட்டையன் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் இணைந்து, ஜே.சி.டி.பிரபாகரை சபாநாயகர் இருக்கையில் அமர வைத்தனர். பின்னர் சட்டமன்றக் கட்சித் தலைவர்கள், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் முதல்-அமைச்சர் விஜய் ஆகியோர் புதிதாக பொறுப்பேற்ற சபாநாயகருக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர்.
அதனைத் தொடர்ந்து உரையாற்றிய சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர், “எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா காட்டிய அரசியல் பாதையில் பயணிப்பவன் நான். தமிழக மக்கள் முதல்-அமைச்சர் விஜய்யை இன்னொரு எம்.ஜி.ஆராகக் காண்கிறார்கள். இந்தத் தேர்தலில் எழுந்தது சாதாரண அலை அல்ல; அது விஜய் அலை, வெற்றியின் அலை, மக்களின் நம்பிக்கையின் அலை. பல்வேறு சவால்கள் வந்தபோதும் எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் அமைதியான மக்கள் புரட்சியை விஜய் உருவாக்கியுள்ளார்.
சாதி, மதம், இன வேறுபாடுகளை கடந்து, பணத்தின் பேரில் அல்லாமல் மக்கள் தங்கள் நம்பிக்கையின் அடிப்படையில் தவெகவை ஆதரித்துள்ளனர். போதையற்ற தமிழ்நாட்டை உருவாக்க வேண்டும் என்பது முதல்-அமைச்சர் விஜய்யின் தெளிவான இலட்சியம். இந்த அவையின் உண்மையான அதிகாரம் மக்களிடமே உள்ளது.
தமிழ் மொழி என்பது வெறும் அடையாளச் சின்னம் அல்ல; தமிழுக்கு இந்த அவையில் எப்போதும் உயர்ந்த இடம் வழங்கப்படும்.கட்சி பாகுபாடின்றி நான் செயல்படுவேன். அனைத்து உறுப்பினர்களுக்கும் சம உரிமையும் வாய்ப்பும் வழங்கப்படும். அவையில் தரமான விவாதங்கள் நடைபெற வேண்டும்.
அவையின் மரியாதையையும் மாண்பையும் பாதுகாப்பது ஒவ்வொருவரின் கடமை. தனிநபர் விமர்சனங்களை தவிர்த்து, மக்கள் நலன் சார்ந்த கருத்துகளே அவையில் ஒலிக்க வேண்டும். அரசியல் மோதல்களுக்காக அல்ல, மக்களின் நம்பிக்கையை நிறைவேற்றுவதற்காகவே நம்மை மக்கள் அவைக்கு அனுப்பியுள்ளனர் என்பதை அனைவரும் உணர வேண்டும்” என்று தெரிவித்தார்.
English Summary
I will not paint party color JCD Prabhakar made bold promise after sitting Speaker seat