15 பேர் யாருன்னு நான் சொல்லவே இல்லையே...! - அ.தி.மு.க புகாருக்குப் பதிலடி கொடுத்த செங்கோட்டையன்...! - Seithipunal
Seithipunal


தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு, அ.தி.மு.க.வில் இருந்து முன்னாள் அமைச்சர்கள் உள்பட 6 சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு, முதல்-அமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர். இதனைத் தொடர்ந்து நடைபெற்ற இடைத்தேர்தல்களில், மரகதம் குமரவேல், சத்தியபாமா ஆகிய இருவரும் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர்.

இதற்கிடையே, மேலும் 15 பேர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணையத் தயாராக இருப்பதாக அமைச்சர் செங்கோட்டையன் அண்மையில் தெரிவித்த கருத்து அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, சட்டமன்ற உறுப்பினர்களைக் கட்சி மாறச் செய்வதற்குக் குதிரை பேரத்தை ஊக்குவிப்பதாகக் குற்றம் சாட்டி, அ.தி.மு.க. தரப்பில் தமிழகப் பொறுப்பு ஆளுநர் ஆர்.வி. அர்லேகரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.

இந்தப் புகார் தொடர்பாக அமைச்சர் செங்கோட்டையனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர் கூறியதாவது,“அ.தி.மு.க.வில் இருந்து சட்டமன்ற உறுப்பினர்கள் தமிழக வெற்றிக் கழகத்துக்கு வருவார்கள் என்று நான் குறிப்பிட்டுச் சொல்லவில்லை. 15 பேர் வருவார்கள் என்றுதான் தெரிவித்தேன். ஆனால், அவர்கள் எந்தக் கட்சியைச் சேர்ந்தவர்கள் என்றோ, யார் யார் என்றோ நான் பெயரைக் குறிப்பிட்டுப் பேசவில்லை.

எனவே, நான் தெரிவித்த கருத்துகளை முழுமையாகப் புரிந்துகொண்டு, அதன் உண்மையான பொருளைத் தெரிந்துகொண்ட பிறகுதான் புகார் மனு அளித்திருக்க வேண்டும்.குதிரை பேரம் என்று கூறுகிறார்கள். தற்போது ம.தி.மு.க.வில் இருந்து இருவர் தி.மு.க.வில் இணைந்துள்ளனர். இதற்கு என்ன பெயர் சூட்டுவார்கள்?

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் தலைமைக் காலத்திலும், முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஆட்சிக் காலத்திலும் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் அ.தி.மு.க.வில் இணைந்துள்ளனர். அதேபோல், அ.தி.மு.க.வில் இருந்தவர்களும் பிற கட்சிகளுக்குச் சென்று இணைந்து தேர்தல்களையும் சந்தித்துள்ளனர்.

அரசியலில் கட்சி மாறுவதும், வெவ்வேறு இயக்கங்களில் இணைவதும் ஏற்கெனவே இருந்து வரும் நடைமுறைதான். இதில் குதிரை பேரத்துக்கு இடமில்லை.உலகத்தையே யார் வேண்டுமானாலும் வெல்ல முடியும். ஆனால், காலத்தை மட்டும் எவராலும் வெல்ல முடியாது. காலம் என்ற புள்ளியில் யாராலும் கோலம் போட முடியாது” என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

I never said who 15 people were Sengottaiyan responded AIADMK complaint


கருத்துக் கணிப்பு

இடைத்தேர்தல் முடிவுகள் யாருக்கு பெரும் பின்னடைவு...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இடைத்தேர்தல் முடிவுகள் யாருக்கு பெரும் பின்னடைவு...!


செய்திகள்



Seithipunal
--> -->