இசையமைப்பாளர் அனிருத் - காவ்யா மாறன் திருமணம்: கிரீஸ் நாட்டில் கோலாகலமாக நடைபெறுகிறது!
Music Composer Anirudh and Kavya Maran to Tie the Knot Grand Wedding in Greece
பிரபல இசையமைப்பாளர் அனிருத்தும், பிரபல தயாரிப்பாளர் கலாநிதி மாறனின் மகளும் ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணியின் நிர்வாகியுமான காவ்யா மாறனும் காதலித்து வருவதாக நீண்ட நாட்களாகத் தகவல்கள் பரவி வந்தன. இந்நிலையில், இந்த வதந்திகள் உண்மையாகி, இருவரும் திருமண பந்தத்தில் இணைய உள்ளனர். இவர்களது திருமணம் அடுத்த மாதம் (நவம்பர்) 11-ஆம் தேதி கிரீஸ் நாட்டில் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது.
கிரீஸ் நாட்டில் பிரம்மாண்ட ஏற்பாடுகள் & சிறப்பு விமானங்கள்
முன்னதாகத் திருமணம் செஷல்ஸ் நாட்டில் நடக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது கிரீஸ் நாடு தேர்வு செய்யப்பட்டுள்ளது. இயற்கை அழகும் கண்கவர் கடற்கரைகளும் நிறைந்த கிரீஸில் நடைபெறும் இத்திருமணத்தில், இரு குடும்பத்தார் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்துகொள்ள உள்ளனர். இதற்காக பிரத்யேகமாக 4 தனி விமானங்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதற்கிடையே, நவம்பர் மாதத்தின் முதல் இரண்டு வாரங்களுக்குத் தனது இசை நிகழ்ச்சிகள் மற்றும் பணிகளை அனிருத் ஒத்திவைத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
நவம்பர் 21-இல் சென்னை வரவேற்பு விழா & அழைப்பு
கிரீஸில் நடைபெறும் திருமணத்தைத் தொடர்ந்து, நவம்பர் 21-ஆம் தேதி சென்னையில் பிரம்மாண்டமான திருமண வரவேற்பு விழா நடைபெறவுள்ளது. இந்த வரவேற்பு நிகழ்ச்சிக்குத் தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டியை நேரில் சந்தித்துச் சன் குழுமத் தலைவர் கலாநிதி மாறன் மற்றும் காவேரி மாறன் ஆகியோர் அழைப்பு விடுத்துள்ளனர்.
இந்தத் தகவலைத் தெலுங்கானா முதலமைச்சரின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தளப் பக்கமும் உறுதிப்படுத்தியுள்ளது. இசை மற்றும் கிரிக்கெட் உலகத்தை இணைக்கும் இந்தத் திருமண நிகழ்வு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Music Composer Anirudh and Kavya Maran to Tie the Knot Grand Wedding in Greece