மின் கொள்முதலில் யூனிட்டுக்கு ரூ.30 வரை செலவு.. அதிமுகவை கடுமையாக விமர்சித்த அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார்! - Seithipunal
Seithipunal


மின் கொள்முதலில் ஒரு யூனிட்டுக்கு ரூ.30 அல்லது அதற்கும் அதிகமான விலையில் பல மாநிலங்கள் மின்சாரம் வாங்கியுள்ளதாகவும், மின்சார உற்பத்திக்கான செலவே ரூ.29 ஆக இருப்பதாகவும் தமிழக மின்சாரத்துறை அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார் தெரிவித்துள்ளார். மேலும், குறுகிய காலத்திற்குள் டெண்டர் மூலம் மின்சாரம் கொள்முதல் செய்திருப்பது இதுவே முதல் முறை என்றும் அவர் விளக்கமளித்துள்ளார்.

மதுரை எம்ஜிஆர் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளை அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார் தொடங்கி வைத்தார். தொடர்ந்து, விளையாட்டு வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்ட அவர், செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது மின் கொள்முதல் விவகாரம் மட்டுமின்றி, அதிமுகவின் தற்போதைய நிலை, எடப்பாடி பழனிசாமியின் தலைமை மற்றும் தமிழகத்தில் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் கருத்துத் தெரிவித்தார்.

அதிமுக குறித்துப் பேசிய அவர், எம்ஜிஆரும் ஜெயலலிதாவும் உயிரைக் கொடுத்து பாதுகாத்த கட்சியைப் பற்றி தான் தவறாக எதுவும் பேசவில்லை என்றார். எடப்பாடி பழனிசாமியைவிட கட்சிக்காக உழைத்த மூத்த நிர்வாகிகள் பலர் இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், அதிமுகவை ஒரு லெட்டர் பேடு கட்சியாக மாற்றிவிட்டதாகத் தான் கூறியதில் எந்தத் தவறும் இல்லை என்றும் தெரிவித்தார். தனது சொந்த நலனுக்காகவும், மகனின் நலனுக்காகவும் எடப்பாடி பழனிசாமி கட்சியை மாற்றிவிட்டதாகக் குற்றம்சாட்டிய அவர், அவருக்குப் பொதுச்செயலாளராகத் தொடரும் தகுதி இல்லை என்றும் விமர்சித்தார்.

மேலும், எடப்பாடி பழனிசாமி டெண்டர் முறையில் முதலமைச்சரானதாக டிடிவி தினகரன் ஏற்கெனவே கூறியதைச் சுட்டிக்காட்டிய அமைச்சர், கட்சிக்காக உழைத்தவர்கள் தற்போது என்ன செய்வதென்று தெரியாமல் தவித்து வருவதாகத் தெரிவித்தார். அதிமுக தலைமைக் கழகம் புரட்சித் தலைவர் எம்ஜிஆருடன் தொடர்புடையது என்றும், தற்போது எடப்பாடி பழனிசாமி அதில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டியுள்ளதாகவும் அவர் கூறினார். இதனால் உண்மையான அதிமுக தொண்டர்கள் அதிருப்தியில் இருப்பதாகவும் தெரிவித்தார். தனது பேச்சால் எடப்பாடி பழனிசாமியின் மனம் புண்பட்டிருந்தால் அதற்குப் பதிலளிக்கத் தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

திமுகவும் அதிமுகவும் இணைந்து ஆட்சி அமைக்கத் திட்டமிட்டதன் காரணமாகவே அதிமுகவினர் கட்சியிலிருந்து வெளியேறியதாகக் கூறிய அமைச்சர், எடப்பாடி பழனிசாமியின் முடிவுகளை கட்சியினர் ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் விமர்சித்தார். அதிமுக எம்எல்ஏக்கள் என்ன செய்வதென்று தெரியாமல் எம்எல்ஏ விடுதியில் முடங்கியிருப்பதாகக் கூறிய அவர், கட்சியை இந்த நிலைக்குக் கொண்டு சென்றதற்கு எடப்பாடி பழனிசாமியின் சுயநலமே காரணம் என்றார். அவரை நம்பி எப்படித் தொடர்ந்து பயணிப்பது என அதிமுக எம்எல்ஏக்களே கேள்வி எழுப்புவதாகவும் தெரிவித்தார். எடப்பாடி பழனிசாமியை நேரடியாகத் தொடர்புகொள்வது கடினமாக இருப்பதாகவும், அவருடன் இருக்கும் உதவியாளர்கள் அல்லது எம்எல்ஏக்கள் மூலமாகவே தொடர்புகொள்ள முடிவதாகவும் அவர் கூறினார்.

மின் கொள்முதல் விவகாரம் குறித்துப் பேசிய அமைச்சர், ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.30 என்ற விலையிலும், அதற்கும் அதிகமான விலையிலும் பல மாநிலங்கள் கொள்முதல் செய்துள்ளதாகத் தெரிவித்தார். மின்சார உற்பத்திக்கான செலவே ரூ.29 ஆக இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், குறுகிய கால அவகாசத்தில் டெண்டர் மூலம் மின்சாரம் கொள்முதல் செய்யும் நடைமுறையை மேற்கொண்டுள்ளதாகவும், இதுபோன்று டெண்டர் மூலம் கொள்முதல் செய்வது இதுவே முதல் முறை என்றும் விளக்கமளித்தார்.

புயல் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கண்டறியப்பட்ட மாவட்டங்களில் கடந்த மூன்று மாதங்களாக முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார். கடந்த காலங்களைப் போல இல்லாமல், தற்போது அரசு தயார்நிலையில் இருப்பதாகக் கூறிய அவர், எந்தக் கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், புகார்கள் மற்றும் பிரச்சினைகள் தொடர்பாக உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.

தமிழகத்தில் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகள் குறித்துப் பேசிய அவர், ஜாபர் சாதிக் தொடர்பான விவகாரத்துக்குப் பிறகே மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்ததாகக் குற்றம்சாட்டினார். இதே விவகாரம் திமுக ஆட்சியில் நடந்திருந்தால், பிடிபட்ட பொருட்கள் வேறு வகையானவை என்று கூறி மறைத்திருப்பார்கள் என விமர்சித்தார். ராமநாதபுரத்தில் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்ட சம்பவத்தையும் சுட்டிக்காட்டிய அவர், அப்போது அவை உரம் என்று கூறி மறைக்கப்பட்டதாகக் குற்றம்சாட்டினார். ஆனால், தற்போதைய தமிழக அரசு அத்தகைய அணுகுமுறையைக் கடைப்பிடிக்காது என்றும், யாராக இருந்தாலும் சட்டப்படி உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Cost of up to Rs 30 per unit for power procurement ​​Minister CTR Nirmal Kumar launches a scathing attack on the AIADMK


கருத்துக் கணிப்பு

இடைத்தேர்தல் முடிவுகள் யாருக்கு பெரும் பின்னடைவு...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இடைத்தேர்தல் முடிவுகள் யாருக்கு பெரும் பின்னடைவு...!


செய்திகள்



Seithipunal
--> -->