“திமுகதான் தோல்விக்குக் காரணம் என்று நாங்கள் சொல்லவில்லை.. ஆர்எஸ் பாரதி வாய் துடுக்காகப் பேசுவதை நிறுத்த வேண்டும்” – பெ.சண்முகம் காட்டம்!
We are not saying that the DMK is the reason for the defeat RS Bharathi must stop making insolent remarks Pe Shanmugam lashes out
திமுகவுடன் வலுவான கூட்டணியில் இருந்தபோதுதான் கடந்த தேர்தலில் தாங்கள் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகள் தோல்வியைச் சந்தித்ததாகவும், அதற்குத் திமுகதான் காரணம் என்று தாங்கள் குற்றம்சாட்டவில்லை என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்துள்ளார். மேலும், திமுக அமைப்புச் செயலாளர் ஆர்எஸ் பாரதி மூத்த அரசியல்வாதி என்பதால் தனது பொறுப்பை உணர்ந்து பேச வேண்டும் என்றும், வாய் துடுக்காகப் பேசுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள சங்கம்பாளையம் காலனியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொள்ளாச்சி தாலுகா குழு அலுவலகத் திறப்பு விழா நடைபெற்றது. இதில் அக்கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் கலந்துகொண்டு புதிய அலுவலகக் கட்டிடத்தைத் திறந்து வைத்தார். தொடர்ந்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய அவர், செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது, வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்த நடவடிக்கை (SIR) காரணமாக வாக்குரிமையை இழந்ததாகக் கூறப்படும் 13 கோடி மக்களின் வாக்குரிமையை மீட்டெடுக்க இந்தியா கூட்டணி சார்பில் முன்னெடுக்கப்படும் போராட்டத்தில் திமுகவும் இணைய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி இரண்டு நாட்களுக்கு முன்பு சென்னையில் இந்தியா கூட்டணிக் கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றதாகவும், அதன் தொடர்ச்சியாகத் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் போராட்டங்களை நடத்தத் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இதற்கான தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் கூறினார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட பெ.சண்முகம், தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரைப் பதவியிலிருந்து நீக்க வேண்டும், SIR நடவடிக்கையால் வாக்குரிமையை இழந்ததாகக் கூறப்படும் மக்களின் வாக்குரிமையை மீட்டெடுக்க வேண்டும், காவல்துறையினரின் அடக்குமுறைக்கு முடிவுகட்ட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். இந்தக் கோரிக்கைகள் தொடர்பாக திமுக எம்.பி.க்கள் குடியரசுத் தலைவரைச் சந்திக்க உள்ளதாகவும் அவர் கூறினார்.
வாக்குரிமையைப் பாதுகாப்பது ஒரு கட்சியின் பிரச்சினை மட்டுமல்ல; அது அடிப்படை ஜனநாயக உரிமை என்று வலியுறுத்திய அவர், அரசியல் கட்சிகளுக்கு இடையே பல்வேறு கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், இந்த விவகாரத்தில் அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும் என்றார். கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் காங்கிரஸுக்கும் இடையே முரண்பாடுகள் இருப்பதாகவும், மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸுடன் கருத்து வேறுபாடுகள் இருப்பதாகவும் சுட்டிக்காட்டினார். இருப்பினும், அந்த வேறுபாடுகளை ஒதுக்கிவைத்துவிட்டு வாக்குரிமையையும் ஜனநாயக உரிமைகளையும் பாதுகாப்பதற்காகப் போராடி வருவதாகக் கூறிய அவர், திமுகவும் நாடு தழுவிய போராட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்தினார்.
தொடர்ந்து, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்எஸ் பாரதியின் பேச்சுகள் குறித்துப் பேசிய பெ.சண்முகம், திமுகவுடன் வலுவான கூட்டணி இருந்தபோதுதான் கடந்த தேர்தலில் தாங்கள் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகள் தோல்வியைச் சந்தித்ததாகக் குறிப்பிட்டார். ஆனால், அந்தத் தோல்விக்குத் திமுகதான் காரணம் என்று தாங்கள் கூறவில்லை என்றார். கூட்டணிக் கட்சிகளின் பலம் இல்லாமல் திமுகவால் வெற்றி பெற்றிருக்க முடியாது என்றும் தெரிவித்தார்.
ஆர்எஸ் பாரதி மூத்த அரசியல்வாதி என்றும், பலமுறை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர் என்றும் குறிப்பிட்ட பெ.சண்முகம், அவர் தனது அரசியல் அனுபவத்தையும் பொறுப்பையும் உணர்ந்து பேச வேண்டும் என்று அறிவுறுத்தினார். இதற்கு முன்பும் அவர் பலமுறை வாய் துடுக்காகப் பேசி கண்டனங்களுக்கு ஆளாகியுள்ளதாகக் கூறிய அவர், இத்தகைய போக்குகளைத் தவிர்க்க வேண்டும் என்றார். மூத்த அரசியல் தலைவர்கள் பொறுப்புடன் பேசுவது இளைய தலைமுறையினருக்கு நல்ல முன்னுதாரணமாக அமையும் என்றும் பெ.சண்முகம் தெரிவித்தார்.
English Summary
We are not saying that the DMK is the reason for the defeat RS Bharathi must stop making insolent remarks Pe Shanmugam lashes out