வெளுத்து வாங்கிய பெருமழை....! சென்னையில் கடந்த 24 மணிநேர மழை நிலவரம் என்ன...?
Heavy rains have washed away What rainfall situation Chennai last 24 hours
சென்னையில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், நேற்று முன்தினம் மாலை தொடங்கிய மழை, நகரின் பல்வேறு பகுதிகளில் இடைவிடாது கொட்டித் தீர்த்தது. குறிப்பாக, வடசென்னையில் மழையின் தாக்கம் மிகக் கடுமையாக இருந்தது. வழக்கமான மழைப்பொழிவைக் காட்டிலும் அதிக அளவில் மழை பெய்ததற்கு மேகவெடிப்பு காரணமாக இருக்கலாம் என்று தமிழ்நாடு வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் தனது சமூக வலைதளப் பதிவில் தெரிவித்துள்ளார்.

மேகவெடிப்பால் கொட்டிய கனமழை
குறிப்பிட்ட சிறிய நிலப்பரப்பில், குறுகிய நேரத்திற்குள் மிக அதிக அளவில் மழை பெய்வது மேகவெடிப்பு எனப்படுகிறது. பொதுவாக, ஒரு மணி நேரத்தில் 10 சென்டிமீட்டருக்கும் அதிகமாக மழை பதிவாகும் நிகழ்வு இவ்வாறு குறிப்பிடப்படுகிறது.
அந்த வகையில், வடசென்னையின் கார்கில் நகரில் 10.9 சென்டிமீட்டர் மழையும், திருவள்ளூர் மாவட்டம் மெப்பேடு பகுதியில் 10 சென்டிமீட்டர் மழையும் பதிவானது. இந்த அதீத மழைப்பொழிவால் சாலைகளில் மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் குளம்போல் தேங்கியதால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
சென்னையில் அதிக மழை பதிவான பகுதிகள்
சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் பல்வேறு இடங்களில் பதிவான மழையளவு விவரம் வருமாறு:
- பாரிமுனை - 36 சென்டிமீட்டர்
- கத்திவாக்கம் - 34.4 சென்டிமீட்டர்
- மீனம்பாக்கம் - 29 சென்டிமீட்டர்
- சென்னை சென்ட்ரல் - 27 சென்டிமீட்டர்
- சாத்தாங்காடு - 26 சென்டிமீட்டர்
- திருவொற்றியூர் - 22 சென்டிமீட்டர்
- எண்ணூர் - 21 சென்டிமீட்டர்
- கார்கில் நகர் - 19 சென்டிமீட்டர்
- சைதாப்பேட்டை - 17 சென்டிமீட்டர்
- வடபழனி - 16 சென்டிமீட்டர்
- நுங்கம்பாக்கம் - 15 சென்டிமீட்டர்
விழுந்த மரங்கள் அகற்றம்; மின்கசிவால் தீ விபத்துகள்
தொடர் கனமழைக்கு மத்தியிலும், சென்னையில் இன்று காலை 6 மணி நிலவரப்படி அனைத்து சுரங்கப்பாதைகளிலும் போக்குவரத்து சீராக இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையே, திருவொற்றியூர், சந்தோஷபுரம் உள்ளிட்ட 10 இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. தகவலறிந்து விரைந்து சென்ற தீயணைப்புப் படையினர், விழுந்த மரங்களை உடனடியாக அகற்றி சீரமைப்புப் பணிகளை மேற்கொண்டனர்.
மேலும், தியாகராய நகர் உள்ளிட்ட 4 இடங்களில் சாலையோர மின்சார இணைப்புப் பெட்டிகளில் ஏற்பட்ட மின்கசிவால் சிறிய அளவிலான தீ விபத்துகள் ஏற்பட்டன. இருப்பினும், அவை விரைந்து கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதால் பெரும் பாதிப்பு தவிர்க்கப்பட்டது.
மீட்புப் பணிகளுக்குத் தயார் நிலையில் பேரிடர் மீட்புக் குழுக்கள்
நள்ளிரவு வரை நீடித்த கனமழையால் நகரின் பல பகுதிகளில் மழைநீர் தேங்கும் அபாயம் ஏற்பட்டது. இதையடுத்து, அரக்கோணத்தில் உள்ள தேசியப் பேரிடர் மீட்புப் படை முகாமிலிருந்து சிறப்புக் குழுவினர் சென்னைக்கு வரவழைக்கப்பட்டனர்.
மாநிலப் பேரிடர் மீட்புப் படையினருடன் இணைந்து, தாழ்வான பகுதிகளில் அவசரகால மீட்புப் பணிகளை மேற்கொள்வது தொடர்பாக அமைச்சர் மற்றும் மாநகராட்சி ஆணையர் ஆகியோர் தேசியப் பேரிடர் மீட்புக் குழுவினருடன் விரிவான ஆலோசனை நடத்தினர்.
கனமழையால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைச் சமாளிக்கவும், பொதுமக்களுக்குத் தேவையான உதவிகளை விரைந்து வழங்கவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
மழைநீர் தேக்கம், மரங்கள் விழுதல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டாலோ அல்லது அவசர உதவி தேவைப்பட்டாலோ, பொதுமக்கள் 1913 என்ற அவசர உதவி எண்ணைத் தொடர்புகொள்ளலாம் என்று சென்னை மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.
English Summary
Heavy rains have washed away What rainfall situation Chennai last 24 hours