'வெள்ளப் பீதி வேண்டாம்... அவசர உதவிக்கு 1913 இருக்கு'...! - அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆறுதல்...!
Dont panic about floods 1913 there emergency help Minister Adhav Arjuna comfort
சென்னையில் கனமழையின்போது தாழ்வான பகுதிகளில் வெள்ளநீர் சூழ்வதைத் தவிர்க்கும் வகையில், பல்வேறு இடங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கைப் பணிகளை அமைச்சர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை ஒட்டியுள்ள 200 அடி சாலையில் நடைபெற்று வரும் வெள்ளத் தடுப்புப் பணிகளைப் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு செய்தார்.

அப்பகுதியில் நெடுஞ்சாலைத் துறையின் பராமரிப்பில் உள்ள 16 சிறிய கால்வாய்கள் வழியாகச் சதுப்பு நிலத்திலிருந்து வெளியேறும் மழைநீர் எவ்விதத் தடையுமின்றிச் செல்வதை அவர் பார்வையிட்டார்.இதற்கிடையே, வணிக வரித்துறை அமைச்சர் லோகேஷ் தமிழ்செல்வன், ஓட்டேரியில் உள்ள ஏஏ சாலை மற்றும் கணேசபுரம் சுரங்கப்பாதைப் பகுதிகளில் நடைபெற்று வரும் திடக்கழிவு மேலாண்மைப் பணிகளை ஆய்வு செய்தார்.
வியாசர்பாடி சந்திப்பு மற்றும் முல்லை நகர் பகுதிகளில் அமைந்துள்ள நீர் சேகரிப்புத் தொட்டிகளில் இருந்து மழைநீரை விரைந்து வெளியேற்றுவதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள ஏற்பாடுகளையும் அவர் ஆய்வு செய்தார்.தொடர்ந்து, கேப்டன் காட்டன் கால்வாய் மற்றும் கொடுங்கையூர் தெற்குக் கால்வாயில் நடைபெற்று வரும் வெள்ளத் தடுப்புப் பணிகளைப் பார்வையிட்ட அமைச்சர், மழைநீர் சீராக வெளியேறுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை ஆய்வு செய்தார்.கனமழை பெய்யும்போது நகரின் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படலாம் என்ற அச்சம் நிலவி வரும் நிலையில், இந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மழை வெள்ளத்தால் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் வசிக்கும் மக்களைப் பாதுகாப்பாகத் தங்க வைப்பதற்காக, வெள்ள நிவாரண மையங்களும் உணவு தயாரிக்கும் சமையலறைகளும் தேவையான அடிப்படை வசதிகளுடன் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகப் பெருநகர சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.மேலும், தாழ்வான பகுதிகளில் தேங்கும் மழைநீரை உடனடியாக வெளியேற்றுவதற்காக மோட்டார் பம்புகள் நிறுவப்பட்டு வருகின்றன.
நிலுவையில் உள்ள பணிகளை விரைந்து முடிப்பதுடன், கால்வாய்களில் மழைநீர் தடையின்றிப் பாய்வதை உறுதிப்படுத்தவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.இதுகுறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா செய்தியாளர்களிடம் பேசுகையில், மழையை முன்னிட்டு பொதுமக்கள் அச்சமடையத் தேவையில்லை என்றும், அதேவேளையில் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
மேலும், மழைநீர் தேக்கம் உள்ளிட்ட அவசரப் பிரச்சினைகள் ஏற்பட்டால், பொதுமக்கள் எந்த நேரத்திலும் செயல்படும் அரசின் உதவி எண்ணான 1913-ஐத் தொடர்புகொண்டு தகவல் தெரிவிக்கலாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
English Summary
Dont panic about floods 1913 there emergency help Minister Adhav Arjuna comfort