'தேனிசைத் தென்றல்' தேவா மறைவு: முழு அரசு மரியாதையுடன் இன்று சொந்த ஊரில் இறுதிச்சடங்கு...!
Denisaid Theral Devas demise Funeral today in hometown with full state honors
தமிழ் திரையுலகில் தனது தனித்துவமான இசையாலும், இனிமையான பாடல்களாலும் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்த இசையமைப்பாளர் தேனிசைத் தென்றல் தேவா காலமானார். கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்த அவர், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று காலை அவரது உடல்நிலை திடீரென மோசமடைந்ததால், உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். அவருக்கு வயது 75.தேவாவின் மறைவுச் செய்தி திரையுலகினரையும், அவரது இசையை நேசித்த ரசிகர்களையும் பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. பல தலைமுறைகளைக் கடந்து ஒலித்த அவரது பாடல்கள், இசை ரசிகர்களின் நினைவுகளில் என்றும் நிலைத்திருக்கும் என்பதில் ஐயமில்லை.

மறைந்த இசையமைப்பாளர் தேவாவின் உடல் அவரது இல்லத்துக்குக் கொண்டுவரப்பட்டது. அங்கு நேரில் சென்ற முதல்-அமைச்சர் விஜய், தேவாவின் உடலுக்கு மலரஞ்சலி செலுத்தி மரியாதை தெரிவித்தார். தொடர்ந்து, தேவாவின் மகன் ஸ்ரீகாந்த் தேவாவைக் கட்டித்தழுவி ஆறுதல் கூறினார்.அமைச்சர்கள் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்களும், திரையுலகைச் சேர்ந்த நடிகர்கள், இசையமைப்பாளர்கள் மற்றும் பல்வேறு கலைஞர்களும் தேவாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
தங்களது இசைப் பயணத்தில் தேவா ஆற்றிய பங்களிப்பையும், அவருடன் கொண்டிருந்த நினைவுகளையும் பலரும் நினைவுகூர்ந்து இரங்கல் தெரிவித்தனர்.இசையமைப்பாளர் தேவாவின் கலைச் சேவையைப் போற்றும் வகையில், அவரது இறுதிச்சடங்கை முழு அரசு மரியாதையுடன் நடத்தத் தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
தேவாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின்னர் அமைச்சர் ராஜ்மோகனும் இதனைத் தெரிவித்தார்.இதையடுத்து, அவரது இறுதிப் பயணத்துக்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடைபெறவுள்ளதால், அதற்கான முன்னேற்பாடுகளை அதிகாரிகள் தீவிரமாகச் செய்து வருகின்றனர்.தேவாவின் சொந்த ஊரான ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அருகே உள்ள சக்கரமல்லூரில் இன்று அவரது இறுதிச்சடங்கு நடைபெறுகிறது.
இதற்காக, இன்று பிற்பகல் 1 மணிக்கு சென்னை தியாகராய நகரில் உள்ள அவரது இல்லத்திலிருந்து உடல் சொந்த ஊருக்குக் கொண்டு செல்லப்படுகிறது.சக்கரமல்லூரில் அமைந்துள்ள தேவாவின் பண்ணை வீட்டில் அவரது உடல் உறவினர்கள் மற்றும் பொதுமக்களின் இறுதி அஞ்சலிக்காகச் சிறிது நேரம் வைக்கப்படுகிறது.
அதனைத் தொடர்ந்து, இறுதிச்சடங்குகள் நடைபெற்று, 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.இந்த நிகழ்வில் ராணிப்பேட்டை ஆயுதப்படைக் காவலர்கள் இறுதி மரியாதை செலுத்த உள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை ஆய்வு செய்வதற்காக அதிகாரிகள் பண்ணை வீட்டுக்குச் சென்று பணிகளைப் பார்வையிட்டனர்.
தேவாவின் மறைவுச் செய்தி அவரது சொந்த ஊரான பழைய மாங்காடு மற்றும் அவரது மனைவியின் பிறந்த ஊரான சக்கரமல்லூர் ஆகிய கிராம மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தங்கள் மண்ணின் மைந்தராகக் கருதப்பட்ட இசையமைப்பாளருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், கிராமத்தின் பல்வேறு இடங்களில் இரங்கல் பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன.
சக்கரமல்லூரில் அமைந்துள்ள தேவாவின் பண்ணை வீடு, இன்று உறவினர்கள், நண்பர்கள் மற்றும் பொதுமக்கள் திரண்டு இறுதி மரியாதை செலுத்தும் இடமாக மாறியுள்ளது. தனது இசையால் எண்ணற்ற ரசிகர்களை மகிழ்வித்த தேவாவுக்கு, அவரது சொந்த மண்ணில் அரசு மரியாதையுடன் இறுதி விடை அளிக்கப்படவுள்ளது.
English Summary
Denisaid Theral Devas demise Funeral today in hometown with full state honors