'மிசாவுக்கே பயப்படாதவன் நான் அமித் ஷாவுக்கா பயப்படப் போகிறேன்'; ராணிப்பேட்டை பிரச்சாரத்தில் மு.க.ஸ்டாலின் பேச்சு..
I am someone who did not fear even MISA declares MK Stalin
தமிழக சட்டமன்ற தேர்தல் இன்னும் ஒன்பது நாட்களில் வரும் 23-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தேர்தலையொட்டி, திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் அக்கட்சி மற்றும் கூட்டணி கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் இன்று ராணிப்பேட்டை மாவட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரப்புரையில் ஈடுபட்டார்.
அப்போது அவர் கூறியதாவது; ராணுவப்பேட்டையாக இருந்த ராணிப்பேட்டைக்கு வந்திருக்கிறேன். ஆற்காடு சீரகச் சம்பா பிரியாணி, மக்கன் பேடா என நவாப்களின் உணவு வகைகளுக்கு பெயர் பெற்ற மாவட்டத்துக்கு வந்துள்ளேன். டெல்லி அணியை வீழ்த்தி தமிழ்நாடு அணி வெற்றி பெற உங்கள் ஆதரவை கேட்டு நான் வந்திருக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், ராணிப்பேட்டையை உலகமே தற்போது வியந்து பார்க்கிறது. ராணிப்பேட்டை மாவட்ட வளர்ச்சிக்காக பார்த்து பார்த்து திட்டங்களை நிறைவேற்றிக் கொடுத்திருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார். ஒன்றிய பாஜக அரசின் தயவு இல்லாமலேயே இந்த அளவுக்கு வளர்ச்சி பெற்றுள்ளோம் என்றும், ஒவ்வொரு மாவட்டமும் வளர்ந்ததால்தான் ஒட்டுமொத்த தமிழ்நாடும் வளர்ச்சி பெற்றுள்ளது என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், தமிழ்நாடு வளர்ந்தால் அது நாட்டுக்கு தானே வளர்ச்சி என்று பாஜக அரசு நினைத்து பார்க்கவில்லை என்றும், மொழியை அழித்தால் தமிழர் பண்பாட்டை அழிக்கலாம் என நினைத்துக் கொண்டிருக்கின்றனர் என்று விமர்சித்துள்ளார். ரூ.2,000 கோடிக்காக தமிழர்களின் சுய மரியாதையை அடமானம் வைக்க நான் காலில் விழுந்து பதவியை வாங்கிய பழனிசாமி அல்ல. மிசாவுக்கே பயப்படாதவன் நான் அமித் ஷாவுக்கா பயப்படப் போகிறேன் என்று எடப்பாடி பழனிசாமியை விமர்சித்துள்ளார்.
English Summary
I am someone who did not fear even MISA declares MK Stalin