ஹால் டிக்கெட் குளறுபடி… குரூப் 2 தேர்வு ரத்து: இளைஞர்கள் அதிர்ச்சி, இபிஎஸ் கடும் கண்டனம்...!
Hall ticket irregularities Group 2 exam cancelled Youths shocked EPS strongly condemns decision
தமிழ்நாடு முழுவதும் இன்று நடைபெறவிருந்த TNPSC குரூப் 2 மற்றும் 2A முதன்மைத் தேர்வு, ஹால் டிக்கெட் மற்றும் தேர்வு மைய ஒதுக்கீட்டில் ஏற்பட்ட கடும் நிர்வாகக் குழப்பங்களால் கடைசி நிமிடத்தில் ஒத்திவைக்கப்பட்ட சம்பவம், ஆயிரக்கணக்கான தேர்வர்களை அதிர்ச்சியிலும் ஏமாற்றத்திலும் ஆழ்த்தியுள்ளது.

இதுகுறித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “தி.மு.க. ஆட்சியின் நிர்வாக திறன் எவ்வளவு பலவீனமாக உள்ளது என்பதை இந்த ஒரு நிகழ்வே வெளிச்சம் போட்டு காட்டுகிறது” என கடுமையாக சாடியுள்ளார்.
மாநில அளவில் மிக முக்கியமான தேர்வாகக் கருதப்படும் குரூப் 2 தேர்வு, தேர்வு நாளன்றே திடீரென ஒத்திவைக்கப்படுவது தமிழ்நாட்டு வரலாற்றிலேயே முதல் முறை என்றும், சில இடங்களில் தேர்வு ரத்து செய்யப்பட்டதே தெரியாமல் மாணவர்கள் தேர்வு எழுதியிருப்பது மிகப் பெரிய நிர்வாக தோல்வி என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“‘டெக்னிக்கல் கோளாறு’ என்ற ஒரே வார்த்தையில் தப்பிக்க முடியாது; அந்த கோளாறுக்குப் பின்னால் இளைஞர்களின் பல ஆண்டுகால உழைப்பும், கனவுகளும் சிதைந்திருக்கின்றன,” என வலியுறுத்திய அவர், வேலைவாய்ப்பு உறுதிமொழிகளை வழங்கிய தி.மு.க. அரசு, ஒரு தேர்வைக் கூட ஒழுங்காக நடத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது என விமர்சித்தார்.
மேலும், 5.5 லட்சம் வேலைவாய்ப்புகள் வழங்குவோம் என்ற வாக்குறுதி நிறைவேறாத நிலையில், இத்தகைய குழப்பங்கள் இளைஞர்களின் நம்பிக்கையை குலைக்கின்றன என்றும் கூறினார்.
அதிகாரிகள்மீது மட்டுமே குற்றத்தை சுமத்தாமல், எதிர்காலத்தில் இதுபோன்ற தவறுகள் நடைபெறாத வகையில் அரசு உடனடி, உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இறுதியாக, தேர்வர்களை மனம் தளர வேண்டாம் என ஊக்கப்படுத்தி, “இளைஞர்களின் கனவுகளை நனவாக்கும் ஆட்சி மீண்டும் அமையும்” என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
English Summary
Hall ticket irregularities Group 2 exam cancelled Youths shocked EPS strongly condemns decision