குடியரசு துணைத் ஜனாதிபதி தேர்தல்: 'இண்டியா கூட்டணி வேட்பாளர் போட்டியிட்டாலும் தேசிய ஜனநாயக கூட்டணியே வெற்றி பெறும்'; ஹெச்.ராஜா..!
H Raja says the National Democratic Alliance will win the Vice Presidential election
குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் தமிழ்நாட்டை சேர்ந்த சி.பி. ராதாகிருஷ்ணன் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். எதிர்க்கட்சிகளின் துணை ஜனாதிபதி வேட்பாளராக உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி சுதர்ஷன் ரெட்டி போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இண்டியா கூட்டணி வேட்பாளர் யார் போட்டியிட்டாலும், எண்ணிக்கைப்படி தேசிய ஜனநாயக கூட்டணியே வெற்றி பெறும் என பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.
சிவகங்கையில் செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் இது குறித்து கூறியதாவது: பிரதமர் மோடி தமிழகத்தின் மீது எப்போதும் மரியாதையும், அன்பும் வைத்திருப்பவர். இந்திய பிரதமர்களிலேயே அதிக முறை தமிழகத்துக்கு வந்து மக்களுக்கு அள்ளி கொடுத்தவர் மோடி தான் என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், சமீபத்தில் தூத்துக்குடிக்கு வந்தபோது ரூ.4,900 கோடிக்கான திட்டங்களை மோடி தொடங்கி வைத்தார். தற்போது குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளராக தமிழகத்தைச் சார்ந்த சி.பி.ராதாகிருஷ்ணனையும் நிறுத்தியுள்ளார். அவர் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் அவர் மேலும் கூறுகையில், தமிழகத்தில் மாநிலங்களவை, மக்களவை என 57 எம்.பி.க்கள் உள்ளனர். தமிழர்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின், சி.பி.ராதாகிருஷ்ணனை ஆதரிக்க வேண்டும் என்றும், இண்டியா கூட்டணி வேட்பாளர் போட்டியிட்டாலும் நிறுத்தினாலும் எண்ணிக்கைப்படி, தேசிய ஜனநாயக கூட்டணியே வெற்றி பெறும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், கடந்த 1996-ஆம் ஆண்டு தமிழகத்தைச் சேர்ந்தவர் பிரதமராகும் நிலை இருந்தது. அப்போது காங்கிரஸில் பலரும் ஜி.கே. மூப்பனார் பெயரை முன்மொழிந்தனர். ஆனால், அது நடக்காமல் போய்விட்டது. ஆர்.வெங்கட்ராமனுக்கு பிறகு யாரும் தமிழகத்தில் இருந்து துணை குடியரசுத் தலைவராக வரவில்லை. இதனால் திமுக எம்.பி.கள் சி.பி.ராதா கிருஷ்ணனை ஆதரிக்க வேண்டும் என்று எச். ராஜா தெரிவித்துள்ளார்.
English Summary
H Raja says the National Democratic Alliance will win the Vice Presidential election