''தமிழக மீனவர்களுக்கு இலங்கையால் விதிக்கப்பட்டிருக்கும் அபராதத்தை வெளியுறவுத் துறை அமைச்சகம் வேடிக்கைப் பார்க்கக் கூடாது;'' ஜி.கே.வாசன் வலியுறுத்தல்..!
GK Vasan says the Ministry of External Affairs should not be amused by Sri Lankas fines on TN fishermen
''இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் பாதிக்கப்படாமல் இருக்க மத்திய அரசு, இலங்கை அரசிடம் கண்டிப்போடு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். தமிழக மீனவர்களின் பாதுகாப்பான மீன்பிடித் தொழிலுக்கு மத்திய அரசு துணை நிற்க வேண்டும்.'' என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது;
''தமிழக மீனவர்களுக்கு இலங்கை நீதிமன்றம் அபராதம் விதித்திருப்பதால் மீனவக் குடும்பங்கள் மிகுந்த கவலை அடைந்துள்ளனர். கடந்த ஜூலை 22-ம் தேதி மீன்பிடிக்கச் சென்ற ராமேஸ்வரம் மீனவர்களில் 9 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
நீதிமன்ற காவல் முடிந்த நிலையில் இலங்கை நீதிமன்றம் ராமேஸ்வரம் மீனவர்களுக்கு ரூ.5.76 கோடி அபராதம் விதித்தது. இது, தமிழக மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கெனவே இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்களின் மீன்பிடித் தொழில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த அபராதத் தொகை மிகுந்த பொருளாதார பாதிப்பை ஏற்படுத்தும்.
இந்தச் சூழலில் தமிழக மீனவர்களுக்கு இலங்கையால் விதிக்கப்பட்டிருக்கும் அபராதத்தை வெளியுறவுத் துறை அமைச்சகம் வேடிக்கைப் பார்க்கக் கூடாது. அபராதத் தொகையை கட்ட முடியாத நிலையில் இருக்கும் தமிழக மீனவர்களை மீட்க வெளியுறவுத் துறை உடனடி நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.
இனிமேலும் இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் பாதிக்கப்படாமல் இருக்க மத்திய அரசு, இலங்கை அரசிடம் கண்டிப்போடு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். தமிழக மீனவர்களின் பாதுகாப்பான மீன்பிடித் தொழிலுக்கு மத்திய அரசு துணை நிற்க வேண்டும்.'' என்று தெரிவித்துள்ளார்.
English Summary
GK Vasan says the Ministry of External Affairs should not be amused by Sri Lankas fines on TN fishermen