ஜி-ஸ்கொயர் கட்டுமான நிறுவனத்திற்கும், தி.மு.க.விற்கும் உள்ள நெருக்கம் வெட்ட வெளிச்சமாகிவிட்டது.! வெளியான பரபரப்பு அறிக்கை.! - Seithipunal
Seithipunal


அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் விடுத்துள்ள அறிக்கையில், "ஒரு நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு பத்திரிகைகள் பெரிதும் துணை புரிகின்றன. எந்த ஒரு நாட்டில் பத்திரிகை சுதந்திரம் பறிக்கப்படுகிறதோ அந்த நாட்டின் வளர்ச்சி பின்னுக்குத் தள்ளப்படும் என்பது பொதுவான கருத்து. அந்த நிலைமை தான் தற்போது தமிழ்நாட்டில் நிலவுகிறது.

ஜனநாயகத்தின் நான்காவது தூணாக விளங்கும் பத்திரிகைத் துறை நாட்டில் நடைபெறும் அக்கிரமங்களையும், அநியாயங்களையும், ஆட்சியாளர்களின் சர்வாதிகாரப் போக்கையும் மக்களுக்கு எடுத்துரைக்கும். பணியை மேற்கொள்ளும் வகையில், G Square என்கிற கட்டுமான நிறுவனம் குறித்தும், அந்த நிறுவனத்திற்கும் தி.மு.க.விற்கு உள்ள நெருக்கம் குறித்தும் ஜூனியர் விகடன் இதழில் இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் செய்திகள் வெளியிடப்பட்டன.

மேற்படி செய்தி வெளியிடப்படாமல் இருக்க தனி நபர் மூலம் ஜூனியர் விகடன் சார்பாக 50 இலட்சம் ரூபாய் பணம் கேட்டதாக கட்டுமான நிறுவனம் தெரிவித்த அதே வேளையில், அந்த தனி நபருக்கும், தங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதை ஜூனியர் விகடன் பத்திரிகை தெளிவுபடுத்தியதாக பத்திரிகைகளில் செய்திகள் வந்தன. 

இது தொடர்பான சட்ட ரீதியான கடிதப் பரிமாற்றங்கள் ஜூனியர் விகடன் இதழிற்கும், கட்டுமான நிறுவனத்திற்கும் இடையே நடைபெற்றுள்ளன. ஜூனியர் விகடன் எழுப்பிய வினாவிற்கான பதிலை மேற்படி கட்டுமான நிறுவனம் இன்னும் பதில் அளிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், கட்டுமான நிறுவனத்தின் சார்பில் 21-05-2022 அன்று மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டதன் அடிப்படையில், ஜூனியர் விகடன் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர்கள் உட்பட அனைவர் மீதும், யூ டியூபர் திரு. மாரிதாஸ் மற்றும் திரு. சவுக்கு சங்கர் ஆகியோர் மீதும் அவசர அவசரமாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படுகிறது என்றால், G Square கட்டுமான நிறுவனத்திற்கும், தி.மு.க.விற்கும் உள்ள நெருக்கம் வெட்ட வெளிச்சமாகிவிட்டது என்பதுதான் பொருள். 

ஜூனியர் விகடன் வெளியிட்ட செய்தி உண்மை என்பது காவல் துறையின் செயல்பாட்டின் மூலம் நிரூபிக்கப்பட்டு இருக்கிறது. பொதுவாக ஒரு நபர் மற்றொரு நபர் மீது புகார் கொடுக்கிறார் என்றால், அது குறித்து சம்பந்தப்பட்டவர்களை அழைத்து, தீர விசாரித்து, இதில் உண்மை இருக்கிறதா என்பதைக் கண்டறிந்த பின் தான் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படுவது வழக்கம். 

ஆனால், G Square கட்டுமான நிறுவனத்தின் சார்பில் அளிக்கப்பட்ட புகாரின் மீது உடனடியாக முதல் தகவல் அறிக்கை பதிவு’ செய்யப்படுகிறது என்றால், அடக்குமுறையின் மூலம் பத்திரிகைச் சுதந்திரத்தை ஒடுக்கிவிடலாம் என்ற உள்நோக்கம் இருக்கிறது என்பதை அறிவார்ந்த தமிழக மக்கள் எளிதில் அறிந்து கொள்வார்கள். அரசே பத்திரிகைச் சுதந்திரத்திற்காக சட்டம் போட்டுவிட்டு, அரசே அதை சீர்குலைப்பது என்பது வேலியே பயிரை மேய்வது போல் ஆகும். தி.மு.க. அரசின் இந்த பத்திரிகை விரோதச் செயலுக்கு, ஜனநாயகத்தை குழி தோண்டி புதைக்கின்ற செயலுக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அவசர அவசரமாக ஜூனியர் விகடன் உள்ளிட்ட பத்திரிகையாளர்கள் மீது போடப்பட்ட அனைத்து வழக்கினையும் உடனடியாக திரும்பப் பெறவும், G Square கட்டுமான நிறுவனம் குறித்து தீர விசாரித்து, அதன் அபரிமிதமான வளர்ச்சி குறித்து அரசு சார்பில் அறிக்கை வெளியிடவும், பத்திரிகை சுதந்திரத்தை பேணிக் காக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். 

இல்லையெனில், நீதி தவறி ஆட்சி நடத்தும் மன்னன், மக்களையும், பொருளையும் ஒரு சேர இழப்பான் என்ற வள்ளுவரின் வாய்மொழிக்கேற்ப நிலைமை மாறிவிடும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்" 


இவ்வாறு அந்த அறிக்கையில் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

G Square issue Ops Statement


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->