'தி ரூட்' நிறுவனர் டூ முதல்வர் விஜய்யின் தனி செயலர்! யார் இந்த ஜெகதீஷ் பழனிசாமி ? ரசிகனின் அசுர வளர்ச்சி!
From The Route founder to Chief Minister Vijay personal secretary Who is this Jagadish Palanisamy A fan meteoric rise
தமிழக முதல்வரும், தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான ஜோசப் விஜய்யின் தனிச் செயலராக ‘தி ரூட்’ (The Route) நிறுவனத்தின் நிறுவனர் ஜெகதீஷ் பழனிசாமி நியமிக்கப்பட்டுள்ளார். நீண்டகாலமாக விஜய்யின் நெருங்கிய வட்டாரத்தில் இருந்து செயல்பட்டு வந்த ஜெகதீஷுக்கு வழங்கப்பட்டுள்ள இந்தப் பொறுப்பு, அரசியல் மற்றும் திரைத்துறை வட்டாரங்களில் கவனம் பெற்றுள்ளது.
தனது புதிய பொறுப்பு குறித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள ஜெகதீஷ் பழனிசாமி, 18 ஆண்டுகளுக்கு முன்பு விஜய்யுடன் ஒரு புகைப்படம் எடுத்துக்கொள்ள வரிசையில் காத்திருந்த ரசிகனாக இருந்த தன்னை, இன்று மாநில முதல்வரின் தனிச் செயலராக அவரது அருகில் நிற்கும் நிலைக்கு கொண்டு வந்தவர் விஜய்தான் என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தனது வாழ்க்கையின் கடினமான காலங்களில் விஜய் அளித்த ஊக்கமும், அவரது புன்னகையே தன்னை நேர்மறையாக மாற்றியதாகவும் அவர் பதிவில் தெரிவித்துள்ளார்.
திரைத்துறையில் 15 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்ட ஜெகதீஷ் பழனிசாமி, கடந்த 2020-ஆம் ஆண்டு ‘தி ரூட்’ என்ற டேலண்ட் மேனேஜ்மென்ட் மற்றும் திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினார்.
சினிமா உலகில் விஜய்யின் நெருங்கிய ஒத்துழைப்பாளராக அறியப்படும் அவர், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த ‘மாஸ்டர்’ மற்றும் ‘லியோ’ திரைப்படங்களில் இணைத் தயாரிப்பாளராகவும் செயல்பட்டுள்ளார்.
தமிழக வெற்றிக் கழகம் தொடங்கப்பட்டு குறுகிய காலத்திலேயே அரசியல் வெற்றியைப் பெறுவதற்கு பின்னணியில் இருந்த முக்கிய காரணிகளில் ஒன்று சமூக வலைதளங்களை திறமையாக கையாள்ந்த டிஜிட்டல் அணுகுமுறை எனக் கூறப்படுகிறது.
இந்த டிஜிட்டல் வியூகத்தின் மையமாக ஜெகதீஷ் பழனிசாமி மற்றும் அவரது ‘தி ரூட்’ நிறுவனம் இருந்ததாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தவெக கட்சியின் ஐடி விங் மற்றும் சமூக வலைதள செயல்பாடுகளை ‘தி ரூட்’ நிறுவனம் முழுமையாக ஒருங்கிணைத்ததாகவும், மாநிலம் முழுவதும் உள்ள விஜய் ரசிகர்களின் தரவுகளை சேகரித்து, டிஜிட்டல் தளங்களில் வலுவான அரசியல் பிரச்சாரத்தை உருவாக்கியதாகவும் கூறப்படுகிறது.
தேர்தல் காலத்தில் விஜய்யின் முக்கிய வியூக ஆலோசகராக செயல்பட்ட ஜெகதீஷ் பழனிசாமி, தற்போது முதல்வரின் தனிச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். இது அவரது விசுவாசம், மேலாண்மை திறன் மற்றும் டிஜிட்டல் அரசியல் அனுபவத்திற்கு வழங்கப்பட்ட அங்கீகாரமாகப் பார்க்கப்படுகிறது.
ஒரு சாதாரண ரசிகனாக தொடங்கி, திரைப்படத் தயாரிப்பாளர், டிஜிட்டல் வியூக நிபுணர், பின்னர் மாநில முதல்வரின் தனிச் செயலர் என்ற நிலைக்கு உயர்ந்துள்ள ஜெகதீஷ் பழனிசாமியின் பயணம், பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
முதல்வர் விஜய்யின் அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள் மற்றும் நிர்வாக நடவடிக்கைகளில் ஜெகதீஷ் பழனிசாமியின் பங்கு முக்கியமானதாக இருக்கும் என அரசியல் பார்வையாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.
English Summary
From The Route founder to Chief Minister Vijay personal secretary Who is this Jagadish Palanisamy A fan meteoric rise