விடியல் பயணம் முதல் உரிமைத் தொகை வரை: மகளிரை மையமாக்கிய ஸ்டாலின் ஆட்சி! - உதயநிதி
From dawn new era basic income scheme Stalin government focuses women Udhayanidhi
“மகளிரின் முன்னேற்றமே அரசின் முன்னேற்றம்” என்ற கொள்கையை மையமாகக் கொண்டு திமுக அரசு செயல்பட்டு வருகிறது என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி, பெண்களை மையப்படுத்திய ‘மகளிர் அரசு’ என அவர் வலியுறுத்தினார்.

சென்னை மாநகராட்சியின் சார்பில், துறைமுகம் சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட வால்டாக்ஸ் சாலை – வ.உ.சி. சாலை பகுதியில், மாநகராட்சி நிதி, எம்எல்ஏ மற்றும் எம்பி தொகுதி மேம்பாட்டு நிதிகளை இணைத்து ரூ.13.56 கோடி மதிப்பில், குளிர்சாதன வசதி மற்றும் பல்வேறு நவீன அம்சங்களுடன் ‘முதல்வர் திருமண மாளிகை’ பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ளது.
இந்த மண்டபத்தை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்து, அதே மேடையில் 10 இணைகளுக்கு திருமணத்தை நடத்தி வைத்து, சீர்வரிசைப் பொருட்களை வழங்கி மணமக்களை வாழ்த்தினார்.
பின்னர் பேசிய அவர், “முந்தைய 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியிலிருந்த வடசென்னை மற்றும் கடந்த 5 ஆண்டுகளில் திமுக ஆட்சியில் ஏற்பட்ட மாற்றம் – இதன் வித்தியாசத்தை மக்கள் தாங்களே உணர்கிறார்கள்,” என்று குறிப்பிட்டார்.
வடசென்னையை முழுமையாக மேம்படுத்த ரூ.8,000 கோடி மதிப்பில் ‘வடசென்னை வளர்ச்சித் திட்டம்’ அறிவிக்கப்பட்டு, அதன் ஒரு பகுதியாக மக்கள் பயன்பாட்டுக்கான திருமண மண்டபங்கள், பேருந்து நிறுத்தங்கள், படிப்பகங்கள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளன என்றும் தெரிவித்தார்.
மேலும், “முதல்வர் ஸ்டாலின் கையெழுத்திட்ட முதல் திட்டமே மகளிர் விடியல் பயணம். குடும்பப் பெண்களின் சுமையை குறைக்க பள்ளி மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
இன்று தினமும் 22 லட்சம் குழந்தைகள் பயனடைகிறார்கள்” என்றார்.அரசுப் பள்ளிகளில் படித்து உயர் கல்வி பெறும் மாணவிகளுக்கு ‘புதுமைப்பெண்’ திட்டத்தின் கீழ் மாதம் ரூ.1,000 கல்வி ஊக்கத் தொகை வழங்கப்படுவதாகவும், ‘கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்’ மூலம் 1.30 கோடி பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 நிதி உதவி கிடைப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
“இந்தத் திட்டங்கள் தொடர வேண்டும்; திராவிட மாடல் ஆட்சி மீண்டும் அமைவது உறுதி. மக்கள் ஆதரவே எங்களின் பலம்,” என்று அவர் தனது உரையை முடித்தார்.
English Summary
From dawn new era basic income scheme Stalin government focuses women Udhayanidhi