தூய்மை பணியாளரை கௌரவித்த ரஜினி! பாராட்டுகளுக்கு நடுவே எழுந்த சர்ச்சை! விட்டு விளாசிய கூல் சுரேஷ்!
Rajinikanth honored a sanitation worker Controversy arose amidst praise Cool Suresh left
சென்னையில் தூய்மை பணியில் ஈடுபட்டிருந்த போது, கேட்பாரற்ற நிலையில் கிடந்த 45 சவரன் நகையை நேர்மையாக காவல் துறையிடம் ஒப்படைத்த தூய்மை பணியாளர் பத்மாவின் செயல், தமிழகமெங்கும் பெரும் பாராட்டுகளைப் பெற்றது. வறுமைச் சூழலிலும் நேர்மையை விட்டுக் கொடுக்காமல் நடந்துகொண்ட பத்மாவை அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் என பலரும் கௌரவித்தனர்.
இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்ததைத் தொடர்ந்து, தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் நேரில் பத்மாவை வரவழைத்து பாராட்டினார். அதேபோல், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பத்மாவையும் அவரது குடும்பத்தினரையும் நேரில் அழைத்து, தங்கச் சங்கிலி அணிவித்து கௌரவித்தார். பத்மாவும் அவரது கணவரும் தீவிர ரஜினி ரசிகர்கள் என்பதால், இந்த சந்திப்பு அவர்களுக்கு மறக்க முடியாத அனுபவமாக அமைந்தது. “ரஜினியை நேரில் பார்ப்பேன் என்று நான் நினைத்துக்கூட பார்த்ததில்லை” என்று பத்மா உணர்ச்சியுடன் பேசியிருந்தார்.
ரஜினிகாந்தைத் தொடர்ந்து, இயக்குநரும் நடிகருமான பார்த்திபன் பத்மாவை கௌரவித்தார். சென்னை எத்திராஜ் கல்லூரியில் நடைபெற்ற பாராட்டு விழாவில், பத்மாவுக்கு புதிய காலணிகளை அணிவித்து, அவரது கால்களில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றார் பார்த்திபன். இந்த நிகழ்வு சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்பட்டது.
ஆனால், இந்த கௌரவிப்புகளுக்கு நடுவே விமர்சனங்களும் எழுந்தன. மேற்குத் தொடர்ச்சி மலை திரைப்படத்தின் இயக்குநர் லெனின் பாரதி, “தூய்மை பணியாளர்கள் தங்களது உரிமைகளுக்காக போராடும்போது எங்கே இருந்தீர்கள்? அவர்களை சீருடையோடு மட்டுமே அடையாளப்படுத்துவது போலி பெருந்தன்மை” எனக் கடுமையாக விமர்சித்திருந்தார். அவரது கருத்து சமூக வலைதளங்களில் பெரிய விவாதத்தை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், நடிகர் கூல் சுரேஷ்வும் இந்த விவகாரத்தில் தனது கருத்தைத் தெரிவித்தது சர்ச்சையை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. அவர் பேசியதாவது, “45 சவரன் நகையை திருப்பிக் கொடுத்ததற்காக பத்மாவை பெருமைப்படுத்துவது சரிதான். ஆனால், ஏன் அவரை எப்போதும் தூய்மை பணியாளர் சீருடையிலேயே காட்ட வேண்டும்? சீருடையை மாற்றிக்கொண்டு வரச் சொல்லி கௌரவிக்க முடியாதா? ஒரு புடவை கட்டி மகாலட்சுமி போல வரச் சொல்லியிருந்தால் குறைந்து போய்விடுமா?” என கேள்வி எழுப்பினார்.
பத்மாவின் நேர்மையான செயல் அனைவராலும் பாராட்டப்பட்டாலும், அவரை கௌரவிக்கும் விதம் குறித்து எழுந்த இந்த விவாதம், சமூக மரியாதை, அடையாளம் மற்றும் சமத்துவம் போன்ற கேள்விகளை மீண்டும் பொதுவெளியில் கொண்டு வந்துள்ளது.
English Summary
Rajinikanth honored a sanitation worker Controversy arose amidst praise Cool Suresh left