விஜய் ரசிகர்கள் காத்திருப்பு முடிவுக்கு வருமா...? - ‘ஜனநாயகன்’ ரிலீஸ் சிக்னல்...!
Will wait Vijay fans end Jananayakan release signal
ஜனநாயகன் திரைப்படம், இயக்குநர் எச்.வினோத் உருவாக்கத்தில், நடிகர் விஜய் நடித்திருக்கும் மிகவும் எதிர்பார்ப்பை கிளப்பிய படமாக உருவெடுத்தது. குறிப்பாக, இது விஜய்யின் இறுதி திரைப்படமாகக் கருதப்பட்டதால், ரசிகர்களிடையே அபாரமான உற்சாகமும் உணர்ச்சி பூர்வமான எதிர்பார்ப்பும் நிலவியது.
கடந்த ஜனவரி மாதம் பொங்கல் திருநாளை முன்னிட்டு இப்படம் திரைக்கு வருமென அறிவிக்கப்பட்ட நிலையில், முன்பதிவு தொடங்கிய சில மணிநேரங்களிலேயே டிக்கெட்டுகள் அனைத்தும் விற்றுத் தீர்ந்தன. திரையரங்குகள் திருவிழா சூழலை எட்டியிருந்த போதிலும், தணிக்கை வாரியத்தின் சான்றிதழ் கிடைக்காத காரணத்தால், அறிவிக்கப்பட்ட தேதியில் படம் வெளியாவதில் தடை ஏற்பட்டது.

பின்னர் பல்வேறு தடைகளை தாண்டி, மறு தணிக்கை குழுவினர் கடந்த மாதம் முழுப் படத்தையும் பார்வையிட்டும், வெளியீட்டு தேதி குறித்து எந்தத் தெளிவும் வெளியாகாமல் நிலைமை மந்தமாகவே நீடித்தது. இந்த குழப்ப நிலையை மேலும் தீவிரப்படுத்தும் வகையில், சில தினங்களுக்கு முன்பு முழு திரைப்படமும் இணையத்தில் கசிந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த எதிர்பாராத சம்பவம் படக்குழுவினரையே அல்லாது ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.இந்த கசிவுக்கு காரணமானவர்களை கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்ட நிலையில், டிஜிபி அலுவலகத்திலும் புகார் அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சைபர் குற்றப்பிரிவு காவலர்கள் தீவிரமாக விசாரணையில் இறங்கி, இணையதளம் மூலம் படத்தை பரப்பியதாக சந்தேகிக்கப்படும் 6 பேரை கைது செய்துள்ளனர்.
இந்நிலையில், நீண்ட நாட்களாக காத்திருந்த ரசிகர்களுக்கு நம்பிக்கையூட்டும் தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, ஜனநாயகன் திரைப்படத்தை வரும் ஏப்ரல் 24ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிட தயாரிப்பாளர் தரப்பு தீவிரமாகத் திட்டமிட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனை முன்னிட்டு, விநியோகஸ்தர்களுடன் முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது.இந்தக் கூட்டத்தில் வெளியீட்டு தேதி தொடர்பான இறுதி முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. விநியோகஸ்தர்களின் முழு ஒத்துழைப்பும் கிடைத்தால், அடுத்த கட்டமாக ஓடிடி தளங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தும் பணியும் தொடங்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இரு தரப்புகளிலும் சாதகமான நிலை உருவானால், ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கும் இந்த படம் ஏப்ரல் 24ஆம் தேதி திரையரங்குகளை அடையும் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
English Summary
Will wait Vijay fans end Jananayakan release signal