தீயணைப்பு, மின்வாரியம், போக்குவரத்து ஊழியர்களுக்கும் இனி தபால் மூலம் வாக்களிக்கலாம்; தேர்தல் ஆணையம் அதிரடி..!
Electricity Board and Transport employees can now also cast their votes via postal ballot
இந்த சட்டமன்ற தேர்தலில் வாக்குப்பதிவு சதவீதத்தை அதிகரிக்க தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்காக வாக்காளர்கள் இடையே பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக அரசு பணியாளர்கள் அனைவரும் தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றுவதை உறுதி செய்யவும் தேர்தல் ஆணையம் முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது.
அதன்படி, போக்குவரத்து மற்றும் மின்வாரியம் உள்ளிட்ட அத்தியாவசிய துறைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கும் இந்தமுறை தபால் வாக்கு செலுத்தும் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தேர்தல் பணிகளில் நேரடியாக ஈடுபடும் ஆசிரியர்கள் மற்றும் காவல்துறை உள்ளிட்ட அரசு ஊழியர்களுக்கு மட்டுமே இதுவரை வழங்கப்பட்டு வந்த இந்த வசதி, இந்த முறை மற்ற அத்தியாவசிய துறைகளுக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில், அரசு கழக போக்குவரத்து டிரைவர்கள், கண்டக்டர்கள் மற்றும் தொழில்நுட்ப பணியாளர்கள் தபால் ஓட்டு போடலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், போக்குவரத்து துறையில் உள்ளவர்களுக்கு விண்ணப்பம் வழங்குவதற்காக வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை ஜெராக்ஸ் பெறப்பட்டு வருகிறது.
அடுத்து மின்விநியோக களப்பணியாளர்கள், சிறைக்காவலர்கள் மற்றும் அதிகாரிகள், அவசரக்கால மீட்புப் பணிகளில் ஈடுபடும் தீயணைப்பு வீரர்கள், அவசர சிகிச்சை மற்றும் ஆம்புலன்ஸ் சேவையில் உள்ள மருத்துவ பணியாளர்களும் இந்த முறை தபால் வாக்குகள் அளிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஏனெனில், தேர்தல் நாளன்று மேற்கண்ட துறைகளைச் சேர்ந்த ஊழியர்கள் விடுமுறை எடுக்க முடியாமல் பணியில் இருக்க வேண்டிய சூழல் நிலவுவதால், அவர்களால், தங்கள் சொந்த தொகுதிகளுக்கு சென்று வாக்களிக்க முடியாத நிலை இருந்து வருகிறது.
இத்தனை தவிர்க்கும் விதமாக, அத்தியாவசிய பணிப்பிரிவினர் என அங்கீகரித்து தேர்தல் ஆணையம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தபால் வாக்கு பெற விரும்பும் தகுதியுள்ள பணியாளர்கள், அதற்கான பிரத்யேக விண்ணப்ப படிவத்தை (விண்ணப்பம் 12D) பூர்த்தி செய்து, தங்கள் துறை சார்ந்த நோடல் அதிகாரியிடம் சமர்ப்பிக்க வேண்டும். அந்த விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு, தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைக்கப்படும்.
அதன் பின்னர், அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட தபால் வாக்கு மையங்களில் குறிப்பிட்ட தேதிகளில் வாக்களிக்க வழிவகை செய்யப்படும். இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ளும் பணியாளர்கள், தேர்தல் நாளன்று நேரில் சென்று சாதாரண வாக்குச் சாவடியில் வாக்களிக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
தேர்தல் ஆணையத்தின் இந்த புதிய நடவடிக்கை அரசுப்பணியாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இது தேர்தல் நாளில் நூறு சதவீத வாக்களிப்பை உறுதி செய்ய உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே வாக்களிக்க தகுதியான அனைவரும் வாக்களிப்பதை உறுதி செய்ய வேண்டும், ஓட்டு சதவீதத்தை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக தேர்தல் நாளன்று அரசு மற்றும் தனியார் துறைகளில் பணியாற்றுபவர்களுக்கு சம்பளத்துடன் விடுமுறை அளிக்க வேண்டும் என்று தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
English Summary
Electricity Board and Transport employees can now also cast their votes via postal ballot