எடப்பாடி பழனிசாமி இனி எதிர்க்கட்சி தலைவராக கூட வர முடியாது...! - செல்வப்பெருந்தகை கடும் விமர்சனம்
Edappadi Palaniswami no longer even become leader opposition Selvapperundhagai strongly criticizes
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை இன்று சென்னையிலிருந்து விமானம் மூலம் தூத்துக்குடிக்கு புறப்பட்டார். புறப்படும் முன் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தி.மு.க. கூட்டணியில் உள்ள ஒவ்வொரு கட்சியையும் தனித்தனியாக அழைத்து, அவர்களுக்கு ஒதுக்க வேண்டிய தொகுதிகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசித்து வருகிறார் என்று தெரிவித்தார்.

தொகுதி பங்கீடு முடிந்த பிறகு, எந்த கட்சிக்கு எந்த தொகுதி என்பதைக் குறித்து அடுத்த கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.கடுமையான போட்டி நிலவும் தொகுதிகளில் தி.மு.க. தானே களம் இறங்கி எதிரணியை தோற்கடித்து வெற்றி பெற்ற அனுபவத்தை கடந்த பாராளுமன்றத் தேர்தலில் முதன்முறையாக பார்த்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
பொதுவாக கடுமையான போட்டி இருக்கும் தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கே ஒதுக்கும் நடைமுறை இருந்த நிலையில், அதற்கு மாறாக சவாலான தொகுதிகளை தாமே எதிர்கொள்வதாக மு.க.ஸ்டாலின் எடுத்த முடிவு தனித்துவமான அரசியல் அணுகுமுறை எனவும் தெரிவித்தார்.
இதனால் கூட்டணி கட்சிகளுக்கிடையே தொகுதி பங்கீடு நல்ல முறையில் நிறைவேறும் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் அவர் கூறினார். மேலும் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக மட்டுமல்ல, எதிர்க்கட்சித் தலைவராக கூட அமர முடியாது என்றும் அவர் விமர்சித்தார்.
மேலும், ராகுல் காந்தி தற்போது தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் தீவிர பிரசாரப் பயணம் மேற்கொண்டு வருகிறார். அதேபோல் அவர் தமிழ்நாட்டிற்கும் விரைவில் வந்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவார் என்றும் செல்வப்பெருந்தகை தெரிவித்தார்.
காங்கிரஸ் சார்பில் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்தவர்களுக்கான நேர்காணலை நடத்த ஸ்கிரீனிங் கமிட்டி அமைக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் நேர்காணல் தொடங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
நடிகர் விஜய் நடிகை திரிஷாவுடன் திருமண வரவேற்பு விழாவில் கலந்து கொண்டது அவர்களின் தனிப்பட்ட விஷயம், அதைப் பற்றி தொடர்ந்து பேசுவது நாகரிகமல்ல, மேலும் கூட்டணியில் காங்கிரசுக்கு கிடைத்த தொகுதிகள் குறித்து பல்வேறு கருத்துகள் இருந்தாலும், அந்த ஒதுக்கீட்டை மனநிறைவுடன் ஏற்றுக்கொள்கிறோம் என்பதே தன்னுடைய நிலைப்பாடு என்றும் அவர் தெரிவித்தார்.
English Summary
Edappadi Palaniswami no longer even become leader opposition Selvapperundhagai strongly criticizes