எந்த குறைகளும், கவலைகளும் இல்லாமல் கல்விப் பணியாற்றும் வரம் கிடைக்கட்டும் - டாக்டர் இராமதாஸ் வாழ்த்துச் செய்தி! - Seithipunal
Seithipunal


பாமக நிறுனவர் மருத்துவர் இராமதாஸ் விடுத்துள்ள ஆசிரியர் நாள் வாழ்த்துச் செய்தியில், "ஒட்டுமொத்த  நாட்டின் முன்னேற்றத்திற்கும் காரணமாகத் திகழும் ஆசிரியர்கள் நாளை கொண்டாடும் ஆசிரியர் பெருமக்கள் அனைவருக்கும் இதயங்கனிந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஏழைக் குடும்பத்தில் பிறந்து, ஆசிரியராக பணி செய்து, இந்தியாவின் முதல் குடிமகன் என்ற உன்னத நிலையை அடைந்தவர் சர்வபள்ளி இராதாகிருஷ்ணன்.  ஆசிரியர்களுக்கெல்லாம் ஆசிரியர் என்று போற்றப்படும் அவரது பிறந்த நாள் தான் ஆசிரியர் நாளாக கொண்டாடப்படுகிறது. இந்த நன்னாளில் தமிழக அளவிலும்,  தேசிய அளவிலும் நல்லாசிரியர் விருது பெறும் அனைத்து ஆசிரியர்களுக்கும்  உளமார்ந்த பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஓர் அறையில் விலைமதிப்பு மிக்க எந்தப் பொருளும் இல்லாவிட்டாலும் கூட, சிறிய விளக்கு ஒளி மட்டும் இருந்து விட்டால், அது அந்த அறையையே நிறைத்து விடும். அதேபோல், ஒரு நாட்டில் எந்த வளமும் இல்லாவிட்டாலும் கூட கல்வியும், மனிதவளமும் மட்டும் நிறைந்திருந்தால், அந்த நாட்டிற்கு மீதமுள்ள அனைத்து வளங்களும் கிடைத்து விடும். கல்வியின் சிறப்பு அந்த அளவுக்கு மகிமையானது. கல்விக்கு அம்மகிமையை வழங்குபவர்கள் கல்வி தரும் வள்ளல்களான ஆசிரியர்கள், ஆசிரியர்கள் தான்.

ஆனால், அத்தகைய ஆசிரியர்களின் நிலை இன்று கொண்டாடும் அளவுக்கு இல்லை. விலைமதிப்பற்ற  கல்வியை வழங்கும் அவர்களுக்கு நிறைவான ஊதியம் வழங்கப்பட வேண்டும். ஆனால், பெரும்பாலான  ஆசிரியர்கள் தற்காலிகமாகவும், கவுரவ விரிவுரையாளர்களாகவும் மிகக்குறைந்த ஊதியத்தில் பணியாற்றி வருகின்றனர். ஓய்வு பெற்றாலும் கூட அவர்களில் பலருக்கு ஓய்வூதியம் கிடைக்க வாய்ப்பில்லை என்பது வருத்தத்திற்கும், வேதனைக்கும் உரியது. அவர்களின் குறைகளும், கவலைகளும் கலையப்படாமல் ஒட்டுமொத்த சமுதாயத்தையும் உயர்த்துவது சாத்தியமாகாது. இதை உரியவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

அனைவரின் உயர்வுக்கும் காரணமான ஆசிரியர்கள் எந்தக் கவலையும் இல்லாமல் இருக்கும் வகையில் அவர்களின் தேவைகள் நிறைவேற்றப்பட்டால் தான் அவர்களால் மிகச்சிறந்த கல்வியை மாணவர்களுக்கு வழங்க முடியும். வேண்டும்.  எனவே, தற்காலிக ஆசிரியர்கள் மற்றும் கவுரவ விரிவுரையாளர்களுக்கு பணி நிலைப்பு, மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட ஆசிரியர்களின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டு, அதன் மூலம் அவர்களின் குறைகளும், கவலைகளும் களையப்பட வேண்டும் என்று கூறி, இந்த நாளில் ஆசிரியர் பெருமக்களுக்கு மீண்டும் ஒருமுறை வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்." 

இவ்வாறு அந்த வாழ்த்துச் செய்தியில் மருத்துவர் இராமதாஸ் தெரிவித்துள்ளார்.  


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Dr Ramadoss Wish Teachers Day 2022


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->