இது தமிழக அரசின் தன்மானத்திற்கு விடுக்கப்பட்ட சவால்., மருத்துவர் இராமதாஸ் கொந்தளிப்பு.! - Seithipunal
Seithipunal


தமிழக வனத்துறையினர் சிறைபிடிப்பு விவகாரத்தில், ஆர்.பி.எப் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள அறிக்கையில், "கோவை அருகே தொடர்வண்டி மோதி 3 யானைகள் உயிரிழந்தது குறித்து விசாரிப்பதற்காக பாலக்காடு   சென்ற தமிழ்நாடு வனத்துறையினரை அங்குள்ள தொடர்வண்டி பாதுகாப்பு படை (ஆர்.பி.எப்) அதிகாரிகள்  கைது செய்துள்ளனர். வனத்துறை அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்ததுடன், அவர்களை சட்டவிரோதமாக காவலில் வைத்த தொடர்வண்டி பாதுகாப்புப் படையினரின் செயல் கண்டிக்கத்தக்கது.

கோவை மாவட்டம் மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட நவக்கரை பகுதியில் தொடர்வண்டிப் பாதையை கடக்க முயன்ற யானைகள் கூட்டத்தின் மீது  வெள்ளிக்கிழமை இரவு கர்நாடகத்தின் மங்களூரிலிருந்து  சென்னைக்கு வந்து கொண்டிருந்த விரைவுத் தொடர்வண்டி மோதியதில் ஒரு தாய் யானை மற்றும் இரு குட்டிகள் என மொத்தம் 3 யானைகள் உயிரிழந்தன. அனுமதிக்கப்பட்டதை விட அதிக வேகத்தில் தொடர்வண்டி வந்தது தான் விபத்திற்கு காரணம் என்று கூறப்படுகிறது. 

இது தொடர்பாக தொடர்வண்டி ஓட்டுனர்கள் இருவரை கைது செய்த தமிழ்நாடு வனத்துறையினர், தொடர்வண்டி எந்திரத்தில் பொருத்தப் பட்டிருந்த வேகம் காட்டும் சிப்’பை பறிமுதல் செய்தனர். அதில் பதிவாகியிருந்த விபரங்களை அறிவதற்காக அவர்கள் பாலக்காடு தொடர்வண்டி நிலையத்திற்கு சென்றனர். ஆனால், அவர்களின் விசாரணைக்கு ஒத்துழைக்காத ஆர்.பி.எப் அதிகாரிகள், வனத்துறையினர் நால்வரை சிறைபிடித்து காவலில் வைத்துள்ளனர்.

நவக்கரை வனப்பகுதியில் தொடர்வண்டி மோதி யானைகள் உயிரிழப்பது வாடிக்கையாகி விட்டது.  நடப்பாண்டில் மட்டும் பத்துக்கும் மேற்பட்ட யானைகள் தொடர்வண்டி மீது உயிரிழந்துள்ளன. பலமுறை எச்சரித்தும் தொடர்வண்டிகள் அந்தப் பாதையில் வேகமாக இயக்கப்படுவது தான் விபத்துகளுக்கு காரணம் என்று கூறப்படுகிறது. யானைகளை பாதுகாக்கும் பணியில் உள்ள தமிழ்நாடு வனத்துறைக்கு  இத்தகைய விபத்துகளைத் தடுக்கும் கடமையும், பொறுப்பும் உண்டு. அந்தக் கடமையை நிறைவேற்றும் வகையில் தான் வனத்துறை அதிகாரி இராமசுப்பிரமணியன் தலைமையிலான குழுவினர், தொடர்வண்டி ஓட்டுனர்களை கைது செய்துள்ளனர். அதற்கான அனைத்து அதிகாரமும் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

அதற்கு பழி வாங்கும்  வகையில் அவர்களை தொடர்வண்டித்துறை பாதுகாப்பு படையினர்  கைது செய்திருப்பது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தும் செயலாகும். அதுமட்டுமின்றி, வனத்துறை  அதிகாரிகளை விடுதலை செய்யும்படி தமிழக வனத்துறை உயரதிகாரிகள் கோரியும் அதை தொடர்வண்டி பாதுகாப்புப் படையினர் ஏற்கவில்லை. யானைகள் மீது தொடர்வண்டியை மோதியதற்காக கைது செய்யப் பட்ட இரு ஓட்டுனர்களை தமிழக வனத்துறையினர் விடுதலை செய்ததுடன், பறிமுதல் செய்யப்பட்ட  சிப்பை ஒப்படைத்த பிறகு தான் வனத்துறை அதிகாரிகள் குழுவை ஆர்.பி.எப் விடுவித்திருக்கிறது.

இந்த மோதலை வனத்துறையினருக்கும், தொடர்வண்டி பாதுகாப்பு படையினருக்கும் இடையே நடந்த மோதலாக பார்க்க முடியாது. கைது செய்யப்பட்ட ஓட்டுனர்களும், தொடர்வண்டி பாதுகாப்புப் படையினரும்  கேரளத்தைச் சேர்ந்தவர்கள். வனத்துறை அதிகாரிகள் குழுவில் இருந்த நால்வரும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். கேரளத்தைச் சேர்ந்த தொடர்வண்டி ஓட்டுனர்களை தமிழ்நாட்டைச் சேர்ந்த வனத்துறை அதிகாரிகள் எவ்வாறு கைது செய்யலாம்? என்ற தன்முனைப்பு தான் இந்த மோதலுக்குக் காரணமாகும்.

கேரளத்தைச் சேர்ந்த அதிகாரிகள் தங்களின் தன்முனைப்புக்காக, விசாரணைக்காக சென்ற தமிழக வனத்துறை அதிகாரிகளை சிறைபிடித்து சட்டவிரோதக் காவலில் வைத்ததும், அவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்ததும் நியாயப்படுத்த முடியாதவை. இது தமிழக அரசின் தன்மானத்திற்கு விடுக்கப்பட்ட சவால் ஆகும். தொடர்வண்டி பாதுகாப்புப் படையினரின் அத்துமீறலுக்கு பணிந்து தொடர்வண்டியின் ஓட்டுனர்கள் இருவரை வனத்துறை அதிகாரிகள் விடுவித்தது ஏற்றுக்கொள்ள முடியாத செயல் ஆகும்.

தமிழக வனத்துறை அதிகாரிகளை தொடர்வண்டி பாதுகாப்புப் படையினர் சிறை பிடித்து அவமதித்ததை  தமிழக அரசு விட்டுவிடக் கூடாது. இதற்குக் காரணமான தொடர்வண்டி பாதுகாப்புப் படை அதிகாரிகள் தண்டிக்கப்பட வேண்டும். தொடர்வண்டித்துறை நிர்வாகத்திடம் இது குறித்து புகார் செய்வது, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு தவறிழைத்தவர்கள் தண்டிக்கப்படுவதையும், பாதிக்கப்பட்டோருக்கு நீதி கிடைப்பதையும் தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்." என்று மருத்துவர் இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Dr Ramadoss say about rpf officers issue in kerala


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->