வீரத்தின் விளைநிலம் தீரன் சின்னமலை! மரியாதை செலுத்திய டாக்டர் ராமதாஸ்!  - Seithipunal
Seithipunal


ஆங்கிலேயர் அஞ்சிய வீரத்தின் விளைநிலம் தீரன் சின்னமலை நினைவை போற்றுவோம் என பா.ம.க நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தன்னுடைய  முகநூலில் பதிவிட்டுள்ளார். 

அவர் பதிவில், "ஆங்கிலேயர்களை அஞ்ச வைத்த வீரத்திற்கும், தீரத்திற்கும் சொந்தக்காரரான கொங்கு நாட்டு மன்னர் தீரன் சின்னமலையின் 216&ஆவது நினைவுநாள் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இந்த நாளில் அந்த தீரனுக்கு நாம் நமது வீர வணக்கத்தை செலுத்துவோம்; மரியாதையை செலுத்துவோம்.

ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகிலுள்ள செ.மேலப்பாளையம் எனும் சிற்றூரில் 1756&ஆம் ஆண்டில் பிறந்த தீரன் சின்னமலை, இளம் வயதிலேயே ஆங்கிலேயர் ஆதிக்கத்துக்கு எதிராக போராடத் தொடங்கினார். இன்றைய கேரளத்திலும் கொங்கு நாட்டின் சேலம் பகுதியிலும் இருந்த கிழக்கிந்திய கம்பெனிப்படை ஒன்று சேராவண்ணம் இடையில் பெரும் தடையாகச் சின்னமலை விளங்கினார். மைசூர் ஸ்ரீரங்கப் பட்டணத்தை ஆட்சி செய்து வந்த திப்பு சுல்தானுக்கும், ஆங்கிலேயர்களுக்கும் இடையில் நடந்த போரில் திப்பு சுல்தான் வெற்றி பெறுவதற்கு பெருமளவில் உதவிகளை செய்தார்.

1801-இல் ஈரோடு காவிரிக்கரையிலும், 1802-இல் ஓடாநிலையிலும், 1804-இல் அறச்சலூரிலும் ஆங்கிலேயர்களுடன் நடைபெற்ற போர்களில் சின்னமலை பெரும் வெற்றி பெற்றார். போரில் சின்னமலையை வெல்ல முடியாது என்பதை அறிந்த  ஆங்கிலேயர்கள் சூழ்ச்சி மூலம், சின்னமலையைக் கைது செய்து சங்ககிரிக் கோட்டைக்குக் கொண்டு சென்று தூக்கிலிட்டனர். ஒரு தீரன் சூழ்ச்சியால் வீழ்த்தப்பட்ட நாள் இன்று.

தீரன் சின்னமலையில் வீர வரலாறு மாணவர்களுக்கு கற்பிக்கப்பட வேண்டும். தீரன் சின்னமலையின் வரலாற்றை அடுத்த தலைமுறையினரும் அறிந்து கொள்ளும் வகையில் பாடப்புத்தகத்தில் சேர்க்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதேபோல் இந்தியா முழுவதும் அனைத்து மாநில மொழிப்பாடங்களிலும் தீரன் சின்னமலையின் வாழ்க்கை வரலாற்றை சேர்க்க வேண்டும். தீரன் சின்னமலையின் நினைவு நாளில் அவரது வீரத்தையும், தீரத்தையும் போற்றுவோம்!" என ராமதாஸ் பதிவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dr ramadoss about Theeran chinnamalai


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->