தண்ணீரில் பயிர்கள் - கண்ணீரில் டெல்டா.! ஏக்கருக்கு ரூ.30,000 இழப்பீடு - அன்புமணி இராமதாஸ் எம்.பி., வலியுறுத்தல்.! - Seithipunal
Seithipunal


காவிரி பாசன மாவட்டங்களில் மழையால் நெற்பயிர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பை கணக்கிட்டு ஏக்கருக்கு ரூ.30,000 வீதம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று, பா.ம.க. இளைஞரணித் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் எம்.பி., வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள அறிக்கையில், "காவிரி பாசன மாவட்டங்களில் பருவம் தவறி பெய்து வரும் மழையால் 50 ஆயிரத்திற்கும் கூடுதலான ஏக்கர் பரப்பளவிலான நெற்பயிர்கள் சேதமடைந்திருக்கின்றன. அறுவடைக்கு தயாராக இருந்த பயிர்கள்  ஓரிரு நாட்கள் மழையில் சேதமடைந்திருப்பது காவிரி டெல்டா உழவர்களை கண்ணீரில் ஆழ்த்தியுள்ளது.

நடப்பாண்டின் சம்பா பருவத்தில் மட்டும் காவிரி பாசன மாவட்டங்கள் மூன்றாவது முறையாக மழையால் பாதிக்கப்பட்டுள்ளன. தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் மட்டும் சுமார் பத்து லட்சம் ஏக்கர் பரப்பளவில் சம்பா பருவ நெல் பயிரிடப்பட்டிருந்தது. அவற்றில் கணிசமான பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்தன. 

ஆனால், கடந்த இரு நாட்களாக பெய்த மழையில் 50 ஆயிரம் ஏக்கருக்கும் கூடுதலாக பரப்பளவிலான சம்பா நெற்பயிர்  தண்ணீரில் மூழ்கி சேதமடைந்து விட்டது. காவிரி பாசன மாவட்டங்களில் பேராவூரணியில் நேற்று ஒரு நாளில் மட்டும் 220 மி.மீட்டர் மழை பெய்திருக்கிறது. மற்ற பகுதிகளிலும் மிக பலத்த மழை பெய்துள்ளது.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் சம்பா பயிர்கள் சேதமடைந்து விட்டன. கடலூர் மாவட்டத்திலும் தொடர் மழையால் சில ஆயிரம் ஏக்கர் பரப்பளவிலான நெல் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. சில இடங்களில் அறுவடைக்கு தயாரான நிலையில் இருந்த பயிர்கள் மழையில் சேதமடைந்ததால், அவற்றில் இருந்த நெல் மணிகள் கொட்டி விட்டன. 

அதனால் அந்த பயிர்களைக் காப்பாற்ற முடியாது. மற்ற இடங்களில் கதிர் பிடிக்கும் நிலையில் இருந்த பயிர்கள் மழை நீரில் மூழ்கி விட்டன. அடுத்த சில நாட்களில் மழை ஓய்ந்து, நெற்பயிர்கள் நிமிரத் தொடங்கினாலும் கூட அவற்றில்  உருவாகும் நெல் மணிகள் பதர்களாகவே இருக்கும் என்பதால் விவசாயிகளுக்கு எந்த பயனும் கிடைக்காது.

தமிழ்நாட்டிலுள்ள உழவர்களால் முதன்மையாக சாகுபடி செய்யப்படும் பருவம் சம்பா பருவம் தான். கடந்த ஆண்டு பருவம் தவறி ஜனவரி மாதம் வரை செய்த மழையால் சம்பா நெற்பயிர்களும், கரும்பு, வாழை உள்ளிட்ட பயிர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டன. பாதிக்கப்பட்ட உழவர்களுக்கு ஓரளவு இழப்பீடு வழங்கப்பட்ட போதிலும் அது உழவர்களின் பாதிப்பை முழுமையாக போக்கவில்லை. 

நடப்பு சம்பா பருவ நெற்பயிர்களை வெற்றிகரமாக அறுவடை செய்தால் தான் கடந்த ஆண்டு ஏற்பட்ட இழப்பை ஈடு செய்ய முடியும் என்று உழவர்கள் நம்பிக் கொண்டிருந்த வேளையில் மூன்றாவது முறையாக சம்பா பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. சிறு, குறு மற்றும் நடுத்தர உழவர்கள் எவரும் கையில் முதலீடு வைத்துக் கொண்டு விவசாயம் செய்வதில்லை. மாறாக, வட்டிக்கு கடன் வாங்கித் தான் விவசாயம் செய்கிறார்கள்.  

நல்ல விளைச்சல் கிடைக்கவில்லை என்றால் அவர்களின் முதலீடு நாசமாகி கடன்காரர்களாக மாறுகின்றனர்.

நவம்பர் மாதத்தில் முதல் பகுதியில் பெய்த வரலாறு காணாத மழையில் காவிரி பாசன மாவட்டங்களில்  1.70 லட்சம் ஏக்கரில் நெற்பயிர்கள் சேதமடைந்ததாக தமிழக அரசின் அமைச்சர்கள் குழுவே கணக்கிட்டு அறிவித்தது. அவற்றில் அறுவடை செய்யும் நிலையில் இருந்த குறுவை பயிர்களுக்கு மட்டும் ஏக்கருக்கு ரூ.8000 இழப்பீடும், சம்பா பயிர்களை மறுநடவு செய்வதற்காக ரூ.2415 மதிப்புள்ள விதை மற்றும் உரங்களும் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது.  

அதன்பிறகு நவம்பர் பிற்பகுதியில் பெய்த மழையில் சேதமடைந்த சம்பா பயிர்களுக்கு எந்த இழப்பீடும் வழங்கப்படவில்லை. முதல் இரு கட்ட மழையில் தப்பிய சம்பா பயிர்கள் கூட இப்போது சேதமடைந்து விட்டன. அவற்றுக்கு உரிய இழப்பீட்டை தமிழக அரசு வழங்காவிட்டால், உழவர்கள் மீள முடியாத கடன் வலையில் சிக்குவதை தடுக்க முடியாது.

தமிழ்நாட்டில் வானம் பெய்தாலும், காய்ந்தாலும் அதனால் பாதிக்கப்படும் முதல் இனம் உழவர்கள் தான்.  உழவர்களின் துயரத்தை அவர்களுக்கானது மட்டும் தான் என்று கூறி கடந்து சென்று விட முடியாது. அவர்கள் தான் உலகுக்கு உணவு படைப்பவர்கள். அவர்கள் பாதிக்கப்படும் போது, நிவாரணம் வழங்கி அவர்களைக் காப்பாற்றா விட்டால், ஒரு கட்டத்தில் உணவுக்கு நாம் ஆளாய் பறக்கும் நிலை உருவாகிவிடும்.

எனவே, காவிரி பாசன மாவட்டங்களில் மழையால் நெற்பயிர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பை கணக்கிட்டு ஏக்கருக்கு ரூ.30,000 வீதம் இழப்பீடு வழங்க வேண்டும். நவம்பர் மாத மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கும் இழப்பீட்டை இதே அளவுக்கு உயர்த்தி, உடனடியாக வழங்குவதற்கு தமிழக அரசு முன்வர வேண்டும்" என்று மருத்துவர் அன்புமணி இராமதாஸ் எம்.பி., வலியுறுத்தியுள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dr Anbumani Ramadoss Say About Cavery Delta Field Floods


கருத்துக் கணிப்பு

இன்று வெளியான விருமன் திரைப்படம் எப்படி இருக்கிறது?Advertisement

கருத்துக் கணிப்பு

இன்று வெளியான விருமன் திரைப்படம் எப்படி இருக்கிறது?
Seithipunal