அமெரிக்கா தற்காலிக அனுமதி: இந்தியா ரஷியாவிடமிருந்து 30 நாட்களுக்கு கச்சா எண்ணெய் வாங்கும் வாய்ப்பு...!
US temporary permission India buy crude oil from Russia 30 days
மத்திய கிழக்கு பகுதியில் வெடித்துள்ள போர் சூழ்நிலை காரணமாக உலகளவில் கச்சா எண்ணெய் விநியோகச் சங்கிலி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதன் தாக்கம் பல நாடுகளுடன் சேர்ந்து இந்தியாவையும் சிக்கலில் ஆழ்த்தியுள்ளது.
இந்தியா தனது மொத்த எண்ணெய் தேவையின் சுமார் 40 சதவீதத்தை மத்திய கிழக்கு நாடுகளிலிருந்தே இறக்குமதி செய்து வருவதால், அந்தப் பகுதியில் ஏற்பட்டுள்ள பதற்றம் நாட்டின் எரிசக்தி பாதுகாப்பில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

தற்போதைய கணக்குகளின்படி, இந்தியாவிடம் கையிருப்பில் உள்ள கச்சா எண்ணெய் சேமிப்பு அதிகபட்சம் 25 நாட்கள் தேவையை மட்டுமே பூர்த்தி செய்யக்கூடிய நிலையில் உள்ளது. இதேவேளை உலகின் முக்கியமான எண்ணெய் போக்குவரத்து பாதைகளில் ஒன்றான ஹார்முஸ் ஜலசந்தி தற்காலிகமாக முடங்கியிருப்பதும் இந்தியாவுக்கு புதிய சவாலாக மாறியுள்ளது.
இதனால் மாற்று வழிகளில் எண்ணெய் கிடைக்கச் செய்வது அவசர தேவையாக உருவெடுத்துள்ளது.இந்த சூழ்நிலையில், இந்தியாவுக்கு கூடுதல் அளவில் கச்சா எண்ணெய் வழங்க ரஷியா முன்வந்தது.
ஏற்கனவே கப்பல்களில் ஏற்றப்பட்டு கடலில் காத்திருக்கும் ரஷிய எண்ணெயை இந்தியாவுக்கு விற்பனை செய்ய ரஷியா தீவிர ஆர்வம் காட்டி வந்தாலும், இந்தியா ஆரம்பத்தில் எச்சரிக்கையான அணுகுமுறையையே கடைப்பிடித்தது.
காரணம், அண்மையில் அமெரிக்காவுடன் செய்யப்பட்ட வர்த்தக ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக ரஷிய எண்ணெயை வாங்குவதில் இந்தியா கட்டுப்பாடு கடைப்பிடிப்பதாக வாக்குறுதி அளித்திருந்தது.
அதன் விளைவாக கடந்த சில மாதங்களில் ரஷிய எண்ணெய் இறக்குமதியை இந்தியா கணிசமாக குறைத்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.ஆனால் தற்போது உருவான அவசர சூழ்நிலையை கருத்தில் கொண்டு, அடுத்த 30 நாட்களுக்கு மட்டும் இந்தியா ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்க அமெரிக்கா தற்காலிக அனுமதி வழங்கியுள்ளது.
இந்த சலுகை குறித்து விளக்கமளித்த அமெரிக்க நிதி அமைச்சர் ஸ்காட் பெசென்ட், “இந்த 30 நாள் அனுமதி ஏற்கனவே நடுக்கடலில் பயணம் செய்து கொண்டிருக்கும் கப்பல்களுக்கு மட்டுமே பொருந்தும்.
இதனால் ரஷியாவுக்கு பெரிய அளவில் நிதி லாபம் கிடைக்காது” என்று தெரிவித்தார்.மேலும் எதிர்காலத்தில் இந்தியா அமெரிக்காவிடமிருந்து அதிகளவில் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்யும் என்ற நம்பிக்கை வாஷிங்டனுக்கு இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதையடுத்து இந்தியாவின் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களான இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகியவை ரஷிய எண்ணெயை உடனடியாக பெற்றுக்கொள்ளும் வகையில் விரைவு பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளன.
தகவல்களின்படி, இந்திய நிறுவனங்கள் ஏற்கனவே வர்த்தகர்களிடமிருந்து சுமார் 2 கோடி பீப்பாய்கள் ரஷிய கச்சா எண்ணெயை வாங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதே நேரத்தில், தனியார் துறையில் செயல்படும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி ரஷிய எண்ணெய் வாங்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
English Summary
US temporary permission India buy crude oil from Russia 30 days