டெல்டாவா இல்லை என்றால் அனுமதி கொடுத்திடுவீங்களா? என்ன பேச்சு இது? ஸ்டாலினுக்கு அன்புமணி சரமாரியான கேள்வி! - Seithipunal
Seithipunal


சேலம் வாழப்பாடியில் நடைபெற்ற பாமக விழாவில் கலந்துகொண்ட அக்கட்சியின் தலைவர் அன்புமணி இராமதாஸ் பேசியதாவது, "இதற்காக எவ்வளவோ போராடி பார்த்து விட்டேன். நேற்று ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தேன். அந்த அறிக்கையில் தமிழகத்தில் புதிதாக மூன்று நிலக்கரி சுரங்கங்கள் அமைக்க ஏலம் விடப்பட்டுள்ளது. அதுவும் பாதுகாக்கப்பட்ட காவிரி வேளாண் மண்டலமான தஞ்சாவூர் ஒரத்தநாடு பகுதியிலும், கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பு பகுதியிலும், டெல்டா பகுதியான அரியலூர் மைக்கேல் பட்டி பகுதியிலும் இந்த நிலக்கரி சுரங்கங்கள் அமைப்பதற்கு மத்திய அரசு கடந்த ஆண்டு ஏலம் விட்டு இருப்பதாக நான் அறிக்கை விட்டிருந்தேன்.

உடனே, தமிழக அரசியல் கட்சிகள், விவசாய சங்கங்கள் கொதித்து எழுந்திருக்கின்றன. இதிலிருந்து நீங்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும் தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு பகுதியில் சுரங்கம் வரும் என்ற ஒரே காரணத்திற்காக தான் இவர்கள் கொதித்து உள்ளார்கள். கடலூர் மாவட்டம் எக்கேடுகெட்டுப் போனாலும் இவர்களுக்கு அக்கறை கிடையாது. 

எத்தனையோ முறை கடலூர் மாவட்டம் ஆபத்தில் இருக்கிறது. காப்பற்றவேண்டும்  என்று நான் போராடி பார்த்தேன். அப்போதெல்லாம் இவர்கள் வரவில்லை. இப்போது கொதிக்கிறார்கள் என்றால், அது தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு பகுதியில் சுரங்கம் வருவது தான் காரணம். தஞ்சாவூர் மாவட்டம் மட்டும்தான் பொன் விளைகின்ற பூமியா? கடலூர் மாவட்டம் இல்லையா?

இந்த விவகாரத்தை 10 நாட்களுக்கு முன்பே சட்டப்பேரவையில் நமது பாமக சட்டமன்ற உறுப்பினர்கள் எழுப்பினார்கள். அப்போது அமைச்சர், அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை, அன்புமணி சொல்வது போல் எல்லாம் கிடையாது. எங்களுக்கு தெரியாமல் யாராவது ஏலம் விட்டுவிட முடியுமா? என்றார் அமைச்சர் தென்னரசு.

அடுத்த நாள் நான் ஆதாரத்தை வெளியிட்டேன். ஆதாரத்தை வெளியிட்ட பிறகு ஆம் உண்மைதான் என்கிறார் அமைச்சர். இப்போ என்ன செய்யப் போகிறீர்கள்? என்று நேற்று நான் அறிக்கை விட்டதற்குப் பிறகு, விவசாய சங்கங்கள், தமிழகத்தில் உள்ள கட்சிகள் அனைவருக்கும் கோபம் வந்துவிட்டது. ஏன்? கடலூர் மாவட்டம் என்றால் அவர்களுக்கு கவலை இல்லை. ஒரத்தநாடு பகுதியில் நிலக்கரி எடுப்பது தான் அவர்களுக்கு கோபம்.

முதலமைச்சர் சட்டப்பேரவையில் கூறுகிறார், நான் டெல்டா காரன். டெல்டாவில் நிலக்கரி எடுக்க விடமாட்டேன் என்கிறார். அப்போ டெல்டா பகுதி இல்லை என்றால் நிலக்கரி எடுக்க விட்டுவிடுவீர்களா? அங்கு மக்கள் இல்லையா? அங்கு விவசாயம் செய்யவில்லையா? அங்கு விவசாயிகள் இல்லையா? வீடு, கிராமம், மக்கள், வாழ்வாதாரம் இல்லையா? டெல்டாவில் மட்டும்தான் இது அனைத்தும் இருக்கிறதா? 

ஒரு முதலமைச்சர் பேசுகிற பேச்சா இது. தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் பாதுகாக்கப்பட வேண்டும். கடலூரில் எடுத்தாலும் சரி, டெல்டா பகுதியில் எடுத்தாலும் சரி, திருப்பூரில் எடுத்தாலும் சரி, எங்கு எடுத்தாலும் அதை நீங்க தான் தடுத்து பாதுகாக்க வேண்டும்.

டெல்டாவில் எடுத்தால் மட்டும் உங்களுக்கு கோபம் வருகிறது. கடலூரில் எடுத்தால் கோபம் வராதா உங்களுக்கு? என்ன பேச்சு இதெல்லாம். இதை நான் விடப்போவதாக இல்லை.

முதலமைச்சர் இரட்டை வேடம் போடாமல், சட்டப்பேரவையிலேயே தமிழகத்தில் ஒரு ஏக்கர் நிலம் கூட நிலக்கரி எடுக்க கொடுக்க மாட்டோம் என்று உறுதியாக தெரிவிக்க வேண்டும். அதுவரை தொடர்ந்து நான் களத்தில் நின்று போராடுவேன். என் மண்ணையும், என் மக்களையும், என் தண்ணீரையும் காப்பாற்ற எந்த எல்லைக்கும் நான் சொல்வேன். இதுதான் பாட்டாளி மக்கள் கட்சி. மற்ற கட்சிகள் போன்று நாங்கள் கிடையாது. அடையாளத்துக்காக நாங்கள் அரசியல் செய்வது கிடையாது. உண்மையாக, உணர்வு பூர்வமாக நாங்கள் அரசியல் செய்கின்றோம். விவசாயிகளுக்கு எங்கு பிரச்சனை வந்தாலும் ஓடோடி வந்து குரல் கொடுப்பது பாட்டாளி மக்கள் கட்சி தான். மக்களாகிய நீங்கள் அதை புரிந்து கொள்ளுங்கள்" என்று அன்புமணி இராமதாஸ் பேசினார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dr Anbumani Ramadoss Question to CM Stalin For Coal Issue


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->