ரூ.30,000 கோடி... முழு பூசணிக்காயை சோற்றில் மறைத்த CM ஸ்டாலின் - பாஜக கண்டனம்!
DMK MK Stalin BJP Narayanan
தூத்துக்குடியில் ரூ.30,000 கோடி முதலீடு விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின் முழு பூசணிக்காயை சோற்றில் மறைத்துள்ளார் என தமிழக பாஜக தலைமை செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி விமர்சித்துள்ளது.
இது குறித்த அவரின் அறிக்கையில், “தூத்துக்குடியில் ரூ.30 ஆயிரம் கோடி முதலீட்டில் 55 ஆயிரம் பேர் வேலை வாய்ப்பு பெரும் வகையில் இரு கப்பல் கட்டும் தளங்கள் அமையவுள்ளன என்றும், கப்பல் கட்டும் சர்வதேச வரை படத்தில் பல்வேறு வேலை வாய்ப்புகளையும் வளர்ச்சியையும் உருவாக்குகிறது திராவிட மாடல் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் கப்பல், துறைமுகம் மற்றும் நீர் நிலைகள் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ‘நவரத்னா’ அந்தஸ்து பெற்ற பொதுத் துறை நிறுவனங்களான கொச்சின் ஷிப் யார்ட் லிமிடெட், மஸாகன் கப்பல் கட்டும் நிறுவனம் ஆகிய இரு நிறுவனங்கள்தான் ரூ.30,000 கோடி முதலீடு செய்வதோடு, 55 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கொடுக்க இருப்பதை தான் திராவிட மாடல் சாதனை என்று மார்தட்டி கொள்கிறார் முதல்வர் ஸ்டாலின். சுய சார்பு பாரதம், சாகர் மாலா திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களின் மூலம் இந்த நிறுவனங்களை மேம்படுத்தி, சர்வதேச அளவுக்கு உயர்த்தியது பாஜக அரசு தான்.
தூத்துக்குடியில் தொழில் வளர்ச்சி பெருகுவது தமிழர்களாகிய நம் அனைவருக்கும் பெருமைதான். ஆனாலும், அந்த வளர்ச்சியை உருவாக்கி கொடுத்த மத்திய அரசுக்கும், பிரதமர் மோடிக்கும் நன்றி சொல்லாமல், பாராட்ட மனமில்லாமல் முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல், திராவிட மாடல் உருவாக்கி கொடுத்தது என தம்பட்டம் அடித்து கொள்வது மலிவான அரசியல். இது திராவிட மாடல் அல்ல முதல்வரே, தேசிய மாடல்” என்று நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.
English Summary
DMK MK Stalin BJP Narayanan