'தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள்'; குழந்தை உரிமைகள் பாதுகாப்புக்கான தேசிய ஆணையத்தில் திமுக புகார்..!
DMK lodges a complaint with the National Commission for Protection of Child Rights regarding the rising incidents of sexual abuse against children in Tamil Nadu
பெண் குழந்தைகள் எதிரான பாலியல் வன்முறை குற்றங்களை 'குழந்தை உரிமைகள் பாதுகாப்புக்கான தேசிய ஆணையம்' விசாரிக்க வேண்டும் என திமுக வழக்கறிஞரும், எம்.பி.யுமான வில்சன் புகார் கொடுத்துள்ளார்.
முன்னதாக தமிழகத்தில் பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் குற்றங்கள் குறித்து தவெக அரசை விமரித்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் விமர்சித்து இருந்தார்.
அதாவது, ''Efficient-ஆன அதிகாரிகளை நியமித்துவிட்டேன்; சிங்கப்பெண் படையை அமைத்துவிட்டேன் என்று சீறிய முதலமைச்சரின் காதுகளுக்கு இந்தச் செய்திகளைப் பார்த்த பிறகாவது, பிஞ்சுகளை இழந்து ஓலமிடும் பெற்றோர்களின் அழுகுரல் கேட்கவில்லையா? மக்களின் பாதுகாப்பு பிரச்சினைகளுக்கு 'கால்ஷீட்' எப்போது? கிரிமினல்கள் சிறிதும் அச்சமின்றிக் குற்றங்களில் ஈடுபடுவதைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?
சவாலும் - சவடாலும் விட்டவர், எப்போது silent mode-இல் இருந்து வெளியே வருவார்? மக்களின் உயிரும், குழந்தைகளின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகி உள்ள நிலையிலும், நான் ஆறு மாதம் எதுவும் கேட்கக் கூடாது என்று நினைக்கிறீர்களா? இல்லை, திராவிட முன்னேற்றக் கழகத்தின் பெரும் போராட்டத்தை எதிர்பார்க்கிறீர்களா?” திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பதிவிட்டு இருந்தார்.
அடுத்ததாக திமுகவின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில்; ''தவெக ஆட்சியில் தினந்தோறும் நடக்கும் குற்றச் சம்பவங்கள் அனைவரின் நெஞ்சத்தை பதைபதைக்க வைக்கிறது. பம்மாத்து வேலை செய்து முதல்வரான விஜய், உங்கள் ஆட்சியில் வரலாறு காணாத வகையில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு போய்விட்டது. சட்டம் ஒழுங்கை சீர் செய்ய நடவடிக்கை எடுக்காவிட்டால் தி.மு.கழகத்தின் பெரும் போராட்டங்களைச் சந்திக்க நேரிடும்'' என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், பெண் குழந்தைகள் எதிரான பாலியல் வன்முறை குற்றங்களை 'குழந்தை உரிமைகள் பாதுகாப்புக்கான தேசிய ஆணையம்' விசாரிக்க வேண்டும் என திமுக வழக்கறிஞரும், எம்.பி.யுமான வில்சன் புகார் கொடுத்துள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது;
''எங்கள் தலைவர் மு.க. ஸ்டாலினின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள் மற்றும் குழந்தைப் பாதுகாப்பு நடைமுறைகளில் தமிழ்நாடு அரசுக்கு ஏற்பட்டுள்ள நிர்வாகச் சீர்கேடுகள் ஆகியவை குறித்து ‘குழந்தை உரிமைகள் பாதுகாப்புக்கான தேசிய ஆணையம்’ தாமாக முன்வந்து விசாரணை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தி, எழுத்துப்பூர்வமான புகாரை அனுப்பியுள்ளேன்'' எனத் தெரிவித்துள்ளார்.
English Summary
DMK lodges a complaint with the National Commission for Protection of Child Rights regarding the rising incidents of sexual abuse against children in Tamil Nadu