திமுக கிரீன் சிக்னல்..திமுக பக்கம் செல்லும் ஓபிஎஸ்?கூட்டணி சஸ்பென்ஸை நீட்டிக்கும் ஓபிஎஸ்! – இந்த மாத இறுதிக்குள் அறிவிப்பு!
DMK green signal OPS to go to DMK side OPS to extend alliance suspense Announcement by the end of this month
தமிழ்நாடு தேர்தல் களம் சூடுபிடித்து வரும் நிலையில், கூட்டணி கணக்குகள் ஒவ்வொன்றாக இறுதி செய்யப்பட்டு வருகின்றன. ஆனால், “தை பிறந்தால் வழி பிறக்கும்” என்று கூறிய முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் (ஓபிஎஸ்) மட்டும் இன்னும் எந்தக் கூட்டணியில் சேரப்போகிறார் என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்காமல் மௌனம் காத்து வருகிறார். இந்த நிலையில், கூட்டணி தொடர்பான கேள்விகளுக்கு அவர் சமீபத்தில் அளித்த பதில்கள் அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாகியுள்ளன.
தமிழ்நாட்டில் இன்னும் சில வாரங்களில் சட்டமன்றத் தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், அதிமுக தலைமையில், பாஜக, பாமக, அமமுக உள்ளிட்ட கட்சிகள் இணைந்து வலுவான தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்டிஏ) உருவாகி வருகிறது. மறுபுறம், ஓபிஎஸின் அரசியல் எதிர்காலம் குறித்து தெளிவில்லாத நிலை நீடித்துக் கொண்டிருக்கிறது.
கடந்த மாதம் கூட்டணி குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, “தை பிறந்தால் வழி பிறக்கும்” என ஓபிஎஸ் பதிலளித்திருந்தார். ஆனால், தை மாதம் பிறந்த பிறகும் அவர் எந்த முடிவையும் அறிவிக்கவில்லை. ஒவ்வொரு முறையும் செய்தியாளர்களைச் சந்திக்கும்போது, “தை மாதம் முடிய இன்னும் நேரம் இருக்கிறது” என்ற பதிலையே அவர் தொடர்ந்து கூறி வந்தார்.
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை சென்னையில் நடைபெற்ற திருமண விழா ஒன்றில் பங்கேற்ற ஓபிஎஸிடம் மீண்டும் கூட்டணி குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். “கூட்டணி தொடர்பான அறிவிப்பை எப்போது எதிர்பார்க்கலாம்?” என்ற கேள்விக்கு அவர் ஆரம்பத்தில் எந்த பதிலும் அளிக்காமல் சென்றார். அதேபோல், “நீங்கள் என்டிஏ கூட்டணியில்தான் இருக்கிறீர்களா?” என்ற கேள்விக்கும் பதிலளிக்கவில்லை.
மேலும், “என்ன நடந்தாலும் ஓபிஎஸ் மற்றும் சசிகலா அதிமுக கூட்டணிக்குப் பாதகமாக செயல்பட மாட்டார்கள்” என டிடிவி தினகரன் கூறியுள்ளாரே என்ற கேள்விக்கு, “ஓ அப்படியா!” என்று மட்டும் பதிலளித்தார். தொடர்ந்து செய்தியாளர்கள் மீண்டும் கேட்டபோது, “கூட்டணி குறித்த அறிவிப்பை இந்த மாத இறுதிக்குள் எதிர்பார்க்கலாம்” என ஓபிஎஸ் கூறினார்.
அதேபோல், திமுக கூட்டணியில் சேர்வது தொடர்பாகவும் ஆலோசனை நடக்கிறதா என்ற கேள்விக்கு, “நீங்கள் எதற்காக இப்படிக் கேள்விகள் கேட்கிறீர்கள் என எனக்குப் புரிகிறது” என்று மட்டும் கூறி, அதற்கு மேல் எந்த விளக்கமும் அளிக்காமல் சென்றார்.
அரசியல் வட்டாரங்களில் பேசப்படுவதுபோல், டிடிவி தினகரனைத் தொடர்ந்து ஓபிஎஸும் என்டிஏ கூட்டணியில் இணைய வேண்டும் என்ற கருத்து வலுப்பெற்று வருகிறது. குறிப்பாக, மீண்டும் அதிமுகவில் இணைவதற்கான முயற்சிகளும் நடந்ததாக சொல்லப்படுகிறது. ஆனால், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஓபிஎஸை மீண்டும் கட்சியில் சேர்க்க எந்த வாய்ப்பும் இல்லை என்பதில் உறுதியாக உள்ளார்.
ஓபிஎஸ், ஒரு கட்டத்தில் எடப்பாடி பழனிசாமியை “அண்ணன்” என அழைத்து சமரச முயற்சி செய்ததாகவும் கூறப்பட்டது. இருந்தாலும், எடப்பாடி பழனிசாமி தனது நிலைப்பாட்டில் மாற்றமில்லை என்றும், ஓபிஎஸை நீக்கியது தனிப்பட்ட முடிவு அல்ல; அது பொதுக்குழு எடுத்த தீர்மானம் என்றும், அதை மாற்ற முடியாது என்றும் தெளிவாக கூறிவிட்டார்.
இதனால், “இந்த மாத இறுதிக்குள்” ஓபிஎஸ் எடுக்கும் முடிவு தமிழக அரசியல் களத்தில் புதிய திருப்பத்தை ஏற்படுத்துமா, அல்லது சஸ்பென்ஸ் தொடருமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
English Summary
DMK green signal OPS to go to DMK side OPS to extend alliance suspense Announcement by the end of this month