கூட்டணியை இழுத்தடிக்கும் தேமுதிக: தொகுதி எண்ணிக்கையில் பிடிவாதமாக பிரேமலதா! கழட்டிவிட ரெடியாகும் திமுக, அதிமுக!
DMDK is dragging the alliance Premalatha is stubborn about the number of seats DMK AIADMK are ready to tear it apart
2026 சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில், தமிழ்நாட்டு அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. பெரும்பாலான அரசியல் கட்சிகள் தங்களின் கூட்டணி நிலைப்பாட்டை ஏற்கனவே அறிவித்துவிட்டாலும், தேமுதிக மட்டும் இதுவரை எந்த கூட்டணியிலும் உறுதியான முடிவை வெளியிடாமல் இருப்பது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு பெரிய கட்சிகளுடனும் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இரு தரப்பிலும் இருந்து “கூட்டணியை உறுதி செய்யுங்கள்” என்ற அழுத்தம் கொடுக்கப்பட்ட போதும், தொகுதி பங்கீடு குறித்து தெளிவான முடிவு எடுக்கப்படாமல் எந்த அறிவிப்பும் இல்லை என்ற நிலைப்பாட்டில் பிரேமலதா விஜயகாந்த் உறுதியாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த ஜனவரி 9ஆம் தேதி கடலூரில் நடைபெற்ற தேமுதிக மாநாட்டிலேயே கூட்டணி குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மாநாட்டில் எதிர்பார்த்ததைவிட அதிக அளவில் தொண்டர்கள் திரண்டதால், இதை ஒரு அரசியல் பலமாகக் கருதி பிரேமலதா விஜயகாந்த் பேரத்தை உயர்த்தியதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அந்த நாளில் கூட்டணி குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.
தகவல்களின்படி, தேமுதிக தரப்பின் முக்கிய கோரிக்கை ஒரு ராஜ்யசபா சீட் மற்றும் இரட்டை இலக்கத்தில் சட்டமன்றத் தொகுதிகள் என்பதாக உள்ளது. திமுக தரப்பில் 8 சட்டமன்றத் தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்யசபா சீட் வழங்க தயாராக இருப்பதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் அதிமுக தரப்பில் ஒரு ராஜ்யசபா சீட் மற்றும் இரட்டை இலக்கத்தில் தொகுதிகள் ஒதுக்கத் தயார் என உறுதி அளிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த சூழலில், முதலில் கூட்டணியை உறுதி செய்யுங்கள் என்று அதிமுக தரப்பில் பிரேமலதா விஜயகாந்துக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் “தொகுதி எண்ணிக்கை முடிவான பிறகே கூட்டணி” என்ற பிடிவாதமான நிலைப்பாட்டில் அவர் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதன் விளைவாக, அதிமுக தற்போது இந்த விவகாரத்தில் சைலண்ட் மோடுக்கு சென்றுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
திமுக தரப்பும் இதேபோல் கப்சிப்பாகி இருப்பதாகக் கூறப்படுகிறது. 2019 மக்களவைத் தேர்தலின்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் விஜயகாந்த் வீட்டிற்கு சென்று கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார். ஆனால் அப்போது வழங்கப்பட்ட தொகுதி எண்ணிக்கையில் உடன்பாடு ஏற்படாததால், தேமுதிக அதிமுக–பாஜக கூட்டணியை நோக்கி நகர்ந்தது. ஒரு கட்டத்தில் பிரதமர் மோடியின் பொதுக்கூட்டத்திற்கான கட் அவுட்டில் விஜயகாந்தின் புகைப்படம் இடம்பெற்றது கூட அரசியல் கவனத்தை ஈர்த்தது.
இருப்பினும், அப்போதும் தேமுதிக இறுதி முடிவை தாமதப்படுத்தியதாக கூறப்படுகிறது. அப்போது தேமுதிக நிர்வாகி ஒருவர் திமுக மூத்த தலைவர் துரைமுருகனை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த முயன்றது, கட்சிக்கு தலைகுனிவை ஏற்படுத்தியதாக அரசியல் விமர்சகர்கள் குறிப்பிடுகின்றனர். இறுதியில், தேமுதிக 4 தொகுதிகளில் அதிமுக–பாஜக கூட்டணியில் போட்டியிட்டு, நான்கிலும் தோல்வியை சந்தித்தது.
அந்த அனுபவம் மீண்டும் ஏற்படக் கூடாது என்பதாலேயே, இந்த முறை தேமுதிக கூட்டணி முடிவை மிகவும் கவனமாகவும், தாமதமாகவும் எடுத்து வருவதாக அரசியல் வட்டாரங்கள் மதிப்பிடுகின்றன. ஆனால் இந்த இழுத்தடிப்பு நிலை நீடித்தால், திமுகவும் அதிமுகவும் தேமுதிகவை ஒதுக்கி விட்டு தங்களது கூட்டணிகளை இறுதி செய்யும் அபாயமும் இருப்பதாக கூறப்படுகிறது. 2026 தேர்தல் நெருங்கும் நிலையில், தேமுதிக எப்போது தனது இறுதி முடிவை அறிவிக்கும் என்பதே தமிழக அரசியலின் முக்கிய எதிர்பார்ப்பாக மாறியுள்ளது.
English Summary
DMDK is dragging the alliance Premalatha is stubborn about the number of seats DMK AIADMK are ready to tear it apart