இயக்குனர் சிகரம் பாரதிராஜா மறைவு...! 'தமிழ் சினிமா ஒரு சகாப்தத்தை இழந்துவிட்டது...! - வைகோ நெஞ்சார அஞ்சலி...!
Director Bharathiraja passes away Tamil cinema has lost an era Vaiko pays heartfelt tribute
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,"திரையுலகின் துருவ நட்சத்திரம் மறைந்திருக்கலாம்; ஆனால் அவர் ஏற்றிய கலைத் தீபம் காலங்களைக் கடந்து தலைமுறைகளை ஒளிரச்செய்துகொண்டே இருக்கும்.தமிழ் மண்ணின் மண்வாசனையையும், கிராமங்களின் உயிரோட்டத்தையும், வீரத் தமிழரின் தன்மானத்தையும் உலக அரங்கில் உயர்த்திப் பதித்த கலைச் சிகரம் பாரதிராஜா இன்று நம்மிடையே இல்லை என்ற செய்தி பேரதிர்ச்சியையும் பேரவேதனையையும் ஏற்படுத்துகிறது.

அவர் விட்டுச் சென்ற வெற்றிடத்தை எந்தக் காலத்திலும் எவராலும் நிரப்ப இயலாது.‘16 வயதினிலே’ திரைப்படம் இளமை இதயங்களை காதலின் மென்மையான தென்றலால் வருடியது. அந்தக் காவியம் நிறைவடைந்தபோது கண்களில் கண்ணீரும், நெஞ்சில் கனமும் நிரம்பிய நிலையில் திரையரங்கை விட்டு வெளியேறினோம்.
‘கிழக்கே போகும் ரயில்’ திரைப்படத்தின் வழியாக காதலின் உலகில் பயணித்தோம். ‘புதிய வார்ப்புகள்’ மூலம் புதிய சிந்தனைகளின் வாசலைத் திறந்தோம். ‘மண் வாசனை’ திரைப்படத்தில் மண்ணின் மரபையும், மனிதர்களின் உணர்வுகளையும் உணர்ந்தோம். ‘சிகப்பு ரோஜாக்கள்’ படத்தில் மர்மத் திரைப்படங்களின் புதிய பரிமாணத்தை கண்டோம்.
நடிப்பின் இமயமாக விளங்கிய சிவாஜி கணேசனை ‘முதல் மரியாதை’ திரைப்படத்தின் வழியாக புதுப்பிறப்பாகக் கண்டோம். ‘பட்டணப் பிரவேசம்’ மூலம் கிராமத்தின் எளிமை நகர வாழ்க்கையோடு இணைவதை ரசித்தோம். ‘கடலோரக் கவிதைகள்’ காதலின் ஆழ்ந்த உணர்வுகளை நம் உள்ளங்களில் விதைத்தது. ‘புதுமைப் பெண்’ திரைப்படம் தமிழ்ப் பெண்களின் துணிச்சலையும் தன்னம்பிக்கையையும் வெளிச்சமிட்டுக் காட்டியது.
“என் உயிரினும் இனிய தமிழ் மக்களே” என்ற கம்பீரமான குரல் ஒலியுடன் தொடங்கிய அவரது திரைப்படங்கள் ஒவ்வொன்றும் மக்களின் இதயங்களில் அழியாத முத்திரையைப் பதித்தன. தமிழ்த் திரையுலகின் பயண திசையையே மாற்றியமைத்த மகத்தான படைப்பாளராக அவர் திகழ்ந்தார்.
பிரமலைக் கள்ளர் சமூகத்தின் பெருமைமிகு புதல்வனாக பிறந்த அவர், கலை உலகின் பிரம்மாவாக உயர்ந்து தமிழர்களின் மனங்களில் நிரந்தர இடம் பிடித்தார்.பாரதிராஜா உடலால் நம்மை விட்டுப் பிரிந்திருக்கலாம்; ஆனால் தனது அழியாப் படைப்புகளின் வழியே காலத்தையும் மரணத்தையும் வென்றுவிட்டார்.
இருப்பினும் அவர் இனி நம்மோடு இல்லை என்ற எண்ணமே கண்களை நனைக்கிறது; இதயத்தை கனக்கச் செய்கிறது.கலை உலகின் கோகினூர் வைரமே! தமிழ்த் திரையின் காவியச் செல்வமே! உமது படைப்புகள் காலம் கடந்தும் வாழும்.
உமது பெயரை உச்சரிக்கும் ஒவ்வொரு தருணத்திலும் எங்கள் உள்ளங்கள் உயிர்ப்படைகின்றன.பாரதிராஜாவின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்.
அவரது கலைப் பாரம்பரியம் தலைமுறைகளை வழிநடத்தட்டும். அவரை உயிராக நேசித்த ஒரு ரசிகனின் இதயத்தில் இருந்து பொங்கும் ஆழ்ந்த இரங்கல் வணக்கம் இது.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Director Bharathiraja passes away Tamil cinema has lost an era Vaiko pays heartfelt tribute