‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா தமிழ் மக்களின் மனங்களில் என்றும் வாழ்வார் - முக ஸ்டாலின் இரங்கல்! - Seithipunal
Seithipunal


தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், தமிழ்த் திரையுலகின் பாதையை மாற்றியமைத்து, புதுப்போக்கினை உருவாக்கிய ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா அவர்களின் மறைவு பெரும் வேதனையைத் தருகிறது. தமிழ்த்திரையுலகிற்குப் பேரிழப்பாகிவிட்ட அந்தப் பெருங்கலைஞனின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

திரைமொழியில் தனிமொழி பேசித் தனிச் சகாப்தத்தையே உருவாக்கியவர் பாரதிராஜா. ஸ்டூடியோக்களுக்குள் அடைபட்டிருந்த கேமராக்கள் பாரதிராஜா அவர்களால் கிராமங்களுக்குள் நுழைந்தன. கிராமத்து மனிதர்களையும் அவர்களது வாழ்க்கையையும் திரைக்குக் கொண்டு வந்து, தமிழ்ச்சினிமாவை யதார்த்தத்திற்கு மிக அருகில் கொண்டு சென்றார்.

16 வயதினிலே, கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள், அலைகள் ஓய்வதில்லை, டிக் டிக் டிக், முதல் மரியாதை, கடலோரக் கவிதைகள், வேதம் புதிது, கருத்தம்மா உள்ளிட்ட அவரது படைப்புகளைத் தமிழ்ச்சினிமாவின் வரலாற்றை எழுதும் எவர் ஒருவரும் தவிர்க்க முடியாது. தனது படைப்பாற்றலின் வழியாகப் பிற மொழிகளிலும் படங்களை இயக்கி, அங்கும் தன் முத்திரையைப் பதித்த அவரை இந்தியத் திரை வரலாறு என்றைக்கும் உச்சத்தில் வைத்து நினைவுகூரும்!

தலைவர் கலைஞர் மீது மிகுந்த பாசம் கொண்டிருந்தவர். தமிழ் மீதும் தமிழினத்தின் மீதும் பற்றுகொண்டு, தமிழ்நாட்டின் உரிமைகள் தொடர்பான போராட்டங்களில் திரையுலகை ஈடுபடுத்தியதில் பாரதிராஜா அவர்களுக்கு மிகப்பெரிய பங்களிப்பு உண்டு.

‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா - ‘இசைஞானி’ இளையராஜா - ‘கவிப்பேரரசு’ வைரமுத்து ஆகியோரது கூட்டணியில் உருவான பாடல்கள் ஒவ்வொரு நிமிடமும் தமிழ்நாட்டின் ஏதோ ஒரு மூலையில் ஒலித்துக்கொண்டும், ஆயிரக்கணக்கான மக்களை மகிழ்வித்துக்கொண்டும்தான் இருக்கின்றன.

அவரது உடல்நலன் குறித்து விசாரிக்கவும், அவரது மகன் மனோஜ் பாரதிராஜாவின் மறைவுக்கு நேரில் சென்று ஆறுதல் கூறவும் பாரதிராஜா அவர்களைச் சந்தித்து உரையாடிய தருணங்களைத் தற்போது நினைக்கையில் நெஞ்சம் மேலும் பாரமடைகிறது.

பாரதிராஜா அவர்களின் பிரிவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும், திரையுலகைச் சேர்ந்த கலைஞர்களுக்கும், பாரதிராஜாவின் மாணவர்களுக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அல்லிநகரத்தில் பிறந்து, அழியாத படைப்புகளைக் கொடுத்த ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா அவர்கள், சினிமா ரசிகர்களின் மனங்களில் - தமிழ் மக்களின் மனங்களில் என்றும் வாழ்வார்! என்று கூறியுள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

DMK MK Stalin condolence to bharathiraja


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




Seithipunal
--> -->