தேவர் ஜெயந்தி விழா அரசியல் திசைமாற்றமா? OPS-செங்கோட்டையன் ‘ஒரே கார்’ பயணம்..! - எடப்பாடி பழனிசாமியின் பதில்
Devar Jayanti festival political diversion OPS Sengottaiyans single car journey Edappadi Palaniswami response
முத்துராமலிங்கத் தேவரின் ஜெயந்தி மற்றும் குருபூஜையை முன்னிட்டு, பசும்பொன்னில் உள்ள தேவர் நினைவிடத்தில் இன்று அரசியல் சூழலைக் கவர்ந்த நிகழ்வு நடைபெற்றது. அங்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி, தேவரின் திருவுருவச் சிலைக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அவருடன், முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், ஆர்.பி. உதயகுமார், செல்லூர் ராஜூ, ராஜேந்திர பாலாஜி உள்ளிட்ட கட்சியின் முக்கிய தலைவர்கள் கலந்துகொண்டனர். பின்னர் ஊடகவியலாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி தெரிவித்ததாவது,“முத்துராமலிங்கத் தேவர், தன்னுடைய சொந்த நிலத்தையே ஏழை மற்றும் பட்டியலின மக்களுக்காக வழங்கிய மனிதநேயத் தலைவர்.
அவர் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினராக மக்களுக்கு அர்ப்பணிப்புடன் பணியாற்றினார்.மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் தேவருக்கு தங்கக் கவசம் அணிவிக்கப்பட்டது. மேலும், பசும்பொன் தேவர் திருமகனாருக்காக சட்டமன்றத்தில் திருவுருவப் படத்தையும் திறந்தது அதிமுகவின் பெருமை.
முத்துராமலிங்கத் தேவருக்கு ‘பாரத் ரத்னா’ விருது வழங்க மத்திய அரசிடம் நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்,” என்று தெரிவித்தார்.இதனிடையே, செய்தியாளர்கள், “மதுரையிலிருந்து பசும்பொன்னுக்கு, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் செங்கோட்டையன் ஒரே காரில் வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இதைப் பற்றி உங்கள் கருத்து?” எனக் கேட்டனர்.அதற்கு எடப்பாடி பழனிசாமி சிரித்தபடி,“அது எனக்குத் தெரியவில்லை. அவர்கள் வந்த பிறகுதான் தெரியும். வந்ததும் நான் பதில் சொல்லுகிறேன்"என்று கூறி நகைச்சுவையுடன் சமாளித்தார்.
இதேவேளை, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அதிமுக மூத்த தலைவர் செங்கோட்டையன் இருவரும் ஒரே காரில் பசும்பொன்னுக்கு வந்த சம்பவம், அரசியல் வட்டாரத்தில் புதிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சிலர் இதை “அதிமுகவில் மீண்டும் ஒன்றிணைவு தொடக்கம்?” எனக் கூற, சிலர் “அரசியல் தந்திரம் மட்டுமே!” எனப் பார்வை வைக்கின்றனர்.
English Summary
Devar Jayanti festival political diversion OPS Sengottaiyans single car journey Edappadi Palaniswami response