எதிர்ப்பு வந்ததும் முடிவுகள் வாபஸ்! விஜய்க்கு தெரிந்துதான் முடிவு எடுக்கப்படுகிறதா? தவெக அரசை விமர்சித்த அண்ணாமலை!
Decisions withdrawn following backlash Are decisions being made with Vijay knowledge Annamalai criticizes the TVK administration
தவெக அரசு கடந்த சில மாதங்களில் எடுத்த பல்வேறு முடிவுகள், எதிர்ப்புகள் எழுந்த பின்னர் திரும்பப் பெறப்படுவது நிர்வாகத்தில் தெளிவின்மையை ஏற்படுத்துவதாக வீ தி லீடர்ஸ் அமைப்பின் தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். கொள்கை முடிவுகளை எடுப்பதற்கு முன்பாக அவற்றின் சட்டரீதியான மற்றும் நிர்வாகரீதியான விளைவுகளை முழுமையாக ஆய்வு செய்து, வெளிப்படைத்தன்மையுடனும் பொறுப்புணர்வுடனும் செயல்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
சட்டம் ஒழுங்கு தொடர்பான பல முக்கிய தகவல்களை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வழங்குவதில் இருந்து பொது சட்டம் ஒழுங்கு துறைக்கு விலக்கு அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டிருந்தது. இதனால் சட்டம் ஒழுங்கு தொடர்பாக கேட்கப்படும் தகவல்களுக்கு இனி பதில் அளிக்கப்படாது என்ற நிலை உருவானது. இந்த அரசாணைக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில், அந்த விலக்கு தொடர்பான அரசாணை திரும்பப் பெறப்பட்டதாக அரசு அறிவித்தது.
இந்த விவகாரத்தை சுட்டிக்காட்டியுள்ள அண்ணாமலை, தவெக அரசு ஆட்சிக்கு வந்த கடந்த ஐந்து மாதங்களில் எடுக்கப்பட்ட பல முடிவுகள் பின்னர் வாபஸ் பெறப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். முதலமைச்சரின் அரசியல் பிரிவு சிறப்பு அதிகாரி நியமனம், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநர் மாற்றம், ஆவின் பால் மொத்த விற்பனையாளர்களுக்கான விலை உயர்வு, மாணவர்கள் போராட்டங்களில் பங்கேற்பதற்கான கட்டுப்பாடுகள் மற்றும் தற்போது சட்டம் ஒழுங்கு தொடர்பான ஆர்டிஐ விலக்கு உள்ளிட்ட முடிவுகளை அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
ஒரு முடிவு அறிவிக்கப்படுகிறது, அதற்கு எதிர்ப்பு எழுந்ததும் உடனடியாக அந்த முடிவு திரும்பப் பெறப்படுகிறது என்ற நிலை தொடர்வது, அரசில் உண்மையில் என்ன நடக்கிறது என்ற கேள்வியை எழுப்புவதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார். மேலும், இந்த முக்கியமான முடிவுகள் அனைத்தும் முதலமைச்சர் விஜய்யின் கவனத்திற்கும் ஒப்புதலுக்கும் சென்றுதான் எடுக்கப்படுகிறதா அல்லது அவருக்குத் தெரியாமலேயே நிர்வாகத்தில் இத்தகைய முடிவுகள் எடுக்கப்படுகின்றனவா என்ற சந்தேகத்தையும் அவர் எழுப்பியுள்ளார்.
ஒரு அரசு கொள்கை முடிவை அறிவிப்பதற்கு முன்பாக அதன் சட்டரீதியான தாக்கம், நிர்வாக ரீதியான விளைவுகள் மற்றும் பொதுமக்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும் என்றும் அண்ணாமலை கூறியுள்ளார். எதிர்ப்பு எழுந்த பிறகு முடிவுகளை அவசரமாக திரும்பப் பெறுவதற்கு பதிலாக, முடிவெடுக்கும் நடைமுறையில் அதிக கவனம், வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வை தவெக அரசு கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
English Summary
Decisions withdrawn following backlash Are decisions being made with Vijay knowledge Annamalai criticizes the TVK administration