கோவையில் போட்டியா...? வைரல் தகவலுக்கு முற்றுப்புள்ளி வைத்த செந்தில்பாலாஜி...!
contest Coimbatore Senthil Balaji puts end viral rumors
கரூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான செந்தில்பாலாஜி, தற்போது கோவை மேற்கு மண்டல தி.மு.க. பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், அந்தப் பொறுப்பின் அடிப்படையில் கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் முகாமிட்டு தேர்தல் பணிகளை தீவிரமாக முன்னெடுத்து வருகிறார்.
இந்தச் சூழலில், அவர் கரூர் தொகுதியை விட்டு விலகி கோவையில் உள்ள ஒரு தொகுதியில் போட்டியிட உள்ளார் என்ற தகவல் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இதற்கு உடனடியாக பதிலளித்த செந்தில்பாலாஜி, அந்த தகவலை திட்டவட்டமாக மறுத்து, “நான் கோவையில் போட்டியிடவில்லை” என்று தெளிவுபடுத்தினார்.

கோவையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,“எஸ்.ஐ.ஆர். பணிகள் முடிவடைந்ததைத் தொடர்ந்து வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் தகுதியான வாக்காளர்கள் யாராவது விடுபட்டுள்ளார்களா, தகுதியற்றவர்கள் சேர்க்கப்பட்டுள்ளார்களா என்பதை பூத் வாரியாக ஆய்வு செய்து, தேவையான ஆட்சேபனைகளை பதிவு செய்ய வேண்டும் என்று கட்சி நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தியுள்ளோம்” என்றார்.
மேலும், தமிழக அரசியல் சூழல் குறித்து அவர் பேசுகையில்,“பழைய அரசியல் கட்சிகளாக இருந்தாலும், புதிதாக உருவான கட்சிகளாக இருந்தாலும், தி.மு.க.வை விமர்சிக்காமல் அரசியல் செய்ய முடியாது என்பதே இன்றைய யதார்த்தம். அரசியல் களத்தில் தங்களை நிலைநிறுத்திக்கொள்ள தி.மு.க.வை விமர்சிப்பதே அவர்களின் ஒரே வழியாக மாறியுள்ளது.
பா.ஜ.க. ஆகட்டும், அ.தி.மு.க. ஆகட்டும் – எல்லோரின் இலக்கும் தி.மு.க.தான். ஆனால் மக்களிடையே வலுவான இயக்கமாகவும், நல்லாட்சியை வழங்கும் அரசாகவும் தி.மு.க. திகழ்கிறது. தேவையற்ற விமர்சனங்களுக்கு செவி சாய்க்க வேண்டிய அவசியமில்லை. அரசுக்கு பயனுள்ள ஆலோசனைகளாக இருந்தால், அவற்றை நிச்சயம் ஏற்றுக்கொள்வோம்” என்றார்.
2026 சட்டமன்றத் தேர்தலை குறித்து அவர் நம்பிக்கையுடன் பேசுகையில்,“அ.தி.மு.க.வும், புதிதாக வந்த கட்சிகளும் ‘தி.மு.க. தான் எங்கள் போட்டியாளர்’ என்று கூறுகிறார்கள். கோவையில் உள்ள 10 தொகுதிகளிலும் மக்களின் ஆதரவை பெற்ற இயக்கம் தி.மு.க.. வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணி மகத்தான வெற்றியை பெறும். நாங்கள் யாரையும் போட்டியாளராகக் கருதவில்லை; அதே நேரத்தில் யாரையும் இகழவும் இல்லை” என்றார்.
தன் தேர்தல் களத்தைப் பற்றிய சர்ச்சைக்கு விளக்கம் அளித்த அவர்,“நான் கோவை தொகுதியில் போட்டியிடப்போகிறேன் என்ற தகவலை சமூக வலைதளங்களில் நானும் பார்த்தேன். கரூர் தொகுதி எனக்கு மிகவும் நெருக்கமானது. கரூர் மக்கள் தொடர்ந்து என்னை வெற்றி பெறச் செய்து வருகின்றனர்.
இதுவரை ஐந்து முறை அவர்கள் என்னை சட்டமன்றத்திற்கு அனுப்பியுள்ளனர். சமூக வலைதளங்களில் வரும் செய்திகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டியதில்லை. கரூர் மக்களின் ஆதரவு இருக்கும் வரை எந்த சந்தேகத்திற்கும் இடமில்லை. கோவையில் உள்ள அனைத்து 10 தொகுதிகளிலும் வெற்றி பெறுவதே எங்களின் இலக்கு” என செந்தில்பாலாஜி தெரிவித்தார்.
English Summary
contest Coimbatore Senthil Balaji puts end viral rumors