சாக்கடை மூடிகள் சரியில்லை... அனைவரும் எச்சரிக்கையுடன் பயணம் செய்யுங்க... செல்வப்பெருந்தகை வேண்டுகோள்!
congress selvaperunthagai rain chennai road
தமிழநாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "மழைக்காலங்களில் சென்னை மற்றும் அனைத்து மாநகரங்கள், நகரங்களில் அடிக்கடி நிகழும் சாலை விபத்துகளுக்குக் காரணமாக காணப்படும் முக்கிய பிரச்சினைகளில் ஒன்று, தாழ்வாக உள்ள பாதாள சாக்கடை மூடிகள் (Manhole Covers) ஆகும். மழை பெய்யும் போது சாலைகள் நீரில் மூழ்குவதால், இம்மூடிகள் தெளிவாக தெரியாமல் போகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் எதிர்பாராதவிதமாக அந்தப் பகுதிகளில் சிக்கி விபத்துக்குள்ளாகின்றனர்.
இரு சக்கர வாகன ஓட்டிகள் மற்றும் சைக்கிள் பயணிகள் அதிக அளவில் பாதிக்கப்படுகிறார்கள். மழைநீர் தேங்கிய சாலைகளில் சாக்கடை மூடிகள் தாழ்வாக இருப்பது வாகனங்களின் சமநிலையை இழக்கச் செய்கிறது. சில நேரங்களில் மூடிகள் திறந்து அல்லது உடைந்து காணப்படுவதால் உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன.
பொதுமக்கள் மழைக்காலங்களில் நீர் தேங்கிய சாலைகளில் அதிக வேகத்தில் செல்ல வேண்டாம். சாலைகளில் அடையாளம் தெரியாத தாழ்வுகளை கவனமாக கடக்க வேண்டும். சந்தேகமான இடங்களில் வாகனத்தை நிறுத்தி நிலைமை சரிபார்க்கவும். சாக்கடை மூடி தாழ்வாகவோ அல்லது உடைந்தோ இருந்தால் உடனடியாக சென்னை மாநகராட்சிக்கு 1913 என்ற இலவச எண்ணில் புகார் தெரிவிக்கவும்.
மாநகராட்சி நிர்வாகங்கள் அனைத்து சாக்கடை மூடிகளும் சரிபார்க்கப்பட்டு, சாலை மட்டத்தில் உயர்த்தப்பட வேண்டும். உடைந்த அல்லது தாழ்வாக உள்ள மூடிகளை உடனடியாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். மக்கள் புகார்கள் விரைவில் தீர்க்கப்பட்டு பாதுகாப்பான சாலை சூழலை உருவாக்க வேண்டும்.
சாலை பாதுகாப்பு என்பது அரசு மற்றும் பொதுமக்கள் இருவரின் பொறுப்பாகும். மழைக்காலங்களில் சிறு கவனக்குறைவாலும் பெரிய விபத்துகள் நேரலாம். எனவே, அனைவரும் எச்சரிக்கையுடன் பயணம் செய்து, பாதுகாப்பாக இருப்போம்" என்று தெரிவித்துள்ளார்.
English Summary
congress selvaperunthagai rain chennai road