இதான் கூட்டணி தர்மமா...? கூட்டணி கட்சிகளுக்கு எச்சரிக்கை விடுத்த காங்கிரஸ் எம்பி!
Congress MP Manickam Tagore condemn to alliance party leaders
காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் விடுத்துள்ள கண்டன அறிக்கையில், “விசிக, மதிமுக, சிபிஐ மற்றும் சிபிஎம் ஆகிய கட்சிகள் இண்டியா எதிர்க்கட்சி தலைவர்களிடம் ‘நடவடிக்கை எடுக்க’ கோரி காங்கிரஸ் கட்சியின் ஒரு நிர்வாகியைப் பற்றி ஊடகத்தில் செய்தி படித்தேன்.
இது ஒரு அடிப்படை கேள்வியை எழுப்புகிறது. காங்கிரஸ் தனது உட்கட்சி விஷயங்களை எப்படி நடத்த வேண்டும் என்று கூட்டணி கட்சிகள் உத்தரவிடத் தொடங்கியது எப்போது? தங்களது உள்கட்சி விஷயங்களில் இதுபோன்ற பொது கருத்துக்களை இக்கட்சிகள் ஏற்றுக்கொள்வார்களா?
தமிழ்நாடு காங்கிரஸ் தலைமை ரவிக்குமார், துரைவைகோ , சண்முகம், வீரபாண்டியன் ஆகியோரிடம் “உங்கள் கட்சி உறுப்பினர்களை இப்படிச் சமாளியுங்கள்” என்று சொன்னால், அவர்கள் அதை சகிப்பார்களா? கூட்டணிகள் பரஸ்பர மரியாதையின் அடிப்படையில் உருவாகின்றன.
பொது அழுத்த அரசியலால் அல்ல. ஏதேனும் கருத்து வேறுபாடுகள் இருந்தால், அவை ஊடக அறிக்கைகள் மூலம் அல்ல; கூட்டணி மேடைகளுக்குள் பேசப்பட வேண்டும்.
ஒரு கூட்டணி கட்சியின் உள்கட்சி செயல்பாடுகளை பொது வெளியில் விமர்சிப்பது ஆபத்தான முன்னுதாரணத்தை உருவாக்குகிறது. இது பாஜக, ஆர்எஸ்எஸ் அமைப்புகளுக்கு எதிரான கூட்டு வலிமையையே பலவீனப்படுத்தும். இது கட்சி செயல் வீரர்கள் தன்மான உணர்வை தூண்டும்.
சிபிஐ, சிபிஎம் ஆகிய தேசிய தலைமைகள் தங்களது மாநில செயலாளர்களுக்கு குறைந்தபட்ச அரசியல் மரியாதையையும், கூட்டணி ஒழுக்கத்தையும் பேண அறிவுறுத்த வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.
அதேபோல், வைகோ, திருமாவளவன் ஆகியோர் கூட்டணி கட்சிகளுடன் நடக்கும் விஷயங்களில் “லக்ஷ்மண் ரேகை”யை மதிக்குமாறு தங்களது எம்.பிக்களுக்கு வழிகாட்ட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.
ஒற்றுமை என்பதன் அர்த்தம் மௌனம் அல்ல. ஆனால் அது கட்டுப்பாட்டையும் பொறுப்பையும் குறிக்கிறது. கூட்டணி தர்மம் அனைவருக்கும் சமமாகவே பொருந்த வேண்டுமே ஒழிய அது காங்கிரஸ் கட்சிக்கு மட்டும் அல்ல” என்று தெரிவித்துள்ளார்.
English Summary
Congress MP Manickam Tagore condemn to alliance party leaders