காங்கிரஸ் கரையும் கட்சி...மக்கள் ஏமாற மாட்டார்கள்...! - குஷ்புவின் அரசியல் அனல் பேச்சு
Congress disintegrating part people not fooled Khushbu fiery political speech
தமிழக பா.ஜ.க. துணைத் தலைவர் நடிகை குஷ்பு செய்தியாளர்களிடம் பேசியபோது, காங்கிரஸ் மற்றும் தி.மு.க. மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.அவர் தெரிவிக்கையில், “இந்த நாட்டின் ஆத்மா மகாத்மா காந்தி என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை.
ஆனால் காங்கிரஸ் கட்சி அரசுத் திட்டங்களுக்கு சோனியா குடும்பத்தின் பெயர்களை சூட்டி பெருமை பேசுகிறது. பிரதமர் மோடி அதுபோல அல்ல; எந்தத் திட்டமாக இருந்தாலும் ‘பிரதம மந்திரி திட்டம்’ என்றே அறிவித்து வருகிறார்” என்றார்.

100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தை 125 நாட்களாக உயர்த்தியுள்ளதை கூட காங்கிரஸ் பேசுவதில்லை என குற்றம் சாட்டிய அவர், “நாட்டுக்காக உழைத்த சுபாஷ் சந்திரபோஸ், சர்தார் வல்லபாய் பட்டேல், வ.உ.சிதம்பரனார் போன்ற தலைவர்களின் பெயர்களையும் திட்டங்களுக்கு வைக்கலாம் என்று ஏன் காங்கிரஸ் போராடவில்லை?” என கேள்வி எழுப்பினார்.
மக்களை ஏமாற்றவே காங்கிரஸ் போராட்டங்களை நடத்துகிறது என்றும், இன்று மக்கள் விரும்பாத கட்சியாக காங்கிரஸ் மாறிவிட்டதாகவும் அவர் விமர்சித்தார். “காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் தான் மிகப்பெரிய ஊழல்கள், கொடூரமான தீவிரவாத தாக்குதல்கள் நடந்தன.
இன்று நாடு அமைதியாக இருக்கிறது; உலக அளவில் இந்தியாவுக்கு பெருமை சேர்த்தவர் மோடி” என கூறினார்.காங்கிரஸ் இன்று கரைந்து வரும் அரசியல் கட்சி என குறிப்பிட்ட குஷ்பு, அதிக தொகுதிகள் கேட்பதாக தகவல்கள் வந்தாலும், அவர்கள் போட்டியிடும் எல்லா இடங்களிலும் வெற்றி பெற முடியுமா என கேள்வி எழுப்பினார்.
தி.மு.க.வை விமர்சித்த அவர், “ஆசிரியர்கள், தூய்மை பணியாளர்கள், அரசு ஊழியர்கள், டாக்டர்கள் என பலர் போராடும் போது யோசிக்காத தி.மு.க., தேர்தல் வந்ததும் மக்கள் மீது பாசம் காட்டுவது பாசாங்கு” என்றார்.
ரேஷன் கடைகளில் மாதந்தோறும் பொருட்கள் வாங்கும் கோடிக்கணக்கான குடும்பங்களை தேர்தல் நேரத்தில் மட்டும் நினைத்து பணம் கொடுத்து ஏமாற்ற முயற்சிப்பதாகவும் குற்றம் சாட்டினார்.
“இந்த முறை மக்கள் ஏமாற மாட்டார்கள். தேசிய ஜனநாயக கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும். எடப்பாடி பழனிசாமி மீண்டும் தமிழக முதல்வராக பதவியேற்பார்” என்று குஷ்பு நம்பிக்கை தெரிவித்தார்.
English Summary
Congress disintegrating part people not fooled Khushbu fiery political speech