காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் சர்ச்சை! “கொங்கு, அருந்ததியர் சமூகங்களுக்கு வாய்ப்பு மறுப்பு” – ஜோதிமணி குற்றச்சாட்டு
Congress candidate list controversy Denial of opportunity for Kongu Arundhatiyar communities Jyothimani alleges
தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் கட்சி தனது வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட நிலையில், அதனை எதிர்த்து கட்சிக்குள் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. குறிப்பாக கரூர் தொகுதி எம்.பி ஜோதிமணி, வேட்பாளர் தேர்வில் சமூக சமநிலை புறக்கணிக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு 28 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், அதில் 27 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், தனது எக்ஸ் (X) பக்கத்தில் பதிவிட்டுள்ள ஜோதிமணி, “நீண்ட காலமாக கட்சிக்காக உழைத்தவர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு, புதியவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.
மேலும், “கொங்கு மண்டலத்தில் செல்வாக்கு கொண்ட கொங்கு வெள்ளாளக் கவுண்டர் மற்றும் அருந்ததியர் சமூகங்களுக்கு எந்தவித வாய்ப்பும் வழங்கப்படவில்லை. இது தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை இல்லாத ஒன்று” என அவர் குறிப்பிட்டார்.
அதேபோல், 28 தொகுதிகளில் 6 தனித்தொகுதிகளை பெற்றிருந்தும், அருந்ததியர் சமூகத்திற்கு வாய்ப்பு வழங்கப்படாதது சமூக நீதி கொள்கைக்கு எதிரானது என்றும், பெண்களுக்கு மிகக் குறைந்த அளவில் மட்டுமே வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.
வேட்பாளர் பட்டியல் முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்டதாகவும், அதற்கேற்ப தொகுதிகள் பெற்றுக்கொள்ளப்பட்டதாகவும் குற்றம் சாட்டியுள்ள ஜோதிமணி, “இது கட்சியின் எதிர்காலத்தையே பாதிக்கும்” என எச்சரித்தார்.
கட்சிக்குள் நீண்ட காலமாக இருந்து வந்த அதிருப்தி தற்போது வெளிப்படையாக வெளிவந்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன. தேர்தல் நெருங்கும் நேரத்தில் காங்கிரஸில் உருவாகியுள்ள இந்த உள்கட்சிப் பிளவு, கூட்டணி அரசியலிலும் தாக்கம் ஏற்படுத்துமா என்பது கவனிக்கப்பட வேண்டியதாக உள்ளது.
English Summary
Congress candidate list controversy Denial of opportunity for Kongu Arundhatiyar communities Jyothimani alleges