மரகதம் குமரவேல் மீது தேர்தல் ஆணையத்தில் புகார்!கூட்டணிக்குள் உள்ளடி வேலையை காட்டிய காங்கிரஸ்! கடுப்பில் தவெக!
Complaint filed with the Election Commission against Maragatham Kumaravel Congress engages in internal sabotage within the alliance TVK furious
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கான சட்டமன்ற இடைத்தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில், மதுராந்தகம் தொகுதியில் போட்டியிடும் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேலின் வேட்புமனு தொடர்பாக புதிய சர்ச்சை எழுந்துள்ளது. கடந்த சட்டமன்ற பொதுத்தேர்தலில் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்துக்கும், தற்போது இடைத்தேர்தலுக்காக தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரத்துக்கும் இடையே பல்வேறு முரண்பாடுகள் இருப்பதாக காங்கிரஸ் நிர்வாகி ஒருவர் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளார்.
மதுராந்தகம் இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மரகதம் குமரவேல் போட்டியிடுகிறார். அவருக்கு எதிராக திமுக, அதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட கட்சிகளின் வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர். இதனால் தொகுதியில் ஐந்து முனைப் போட்டி நிலவி வரும் நிலையில், தேர்தல் பிரச்சாரம் நேற்று நிறைவடைந்தது.
இந்த சூழலில், கோவையைச் சேர்ந்த காங்கிரஸ் நிர்வாகி பிரபு என்பவர் தேர்தல் ஆணையத்திடம் புகார் மனு ஒன்றை அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது. அதில், மரகதம் குமரவேல் கடந்த பொதுத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பின்னர் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்ததாகவும், தற்போது மதுராந்தகம் இடைத்தேர்தலில் தவெக வேட்பாளராக போட்டியிடுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், கடந்த பொதுத்தேர்தலின்போது மரகதம் குமரவேல் தாக்கல் செய்த படிவம் 26 பிரமாணப் பத்திரத்தையும், தற்போதைய இடைத்தேர்தலுக்காக அவர் தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரத்தையும் ஒப்பிட்டுப் பார்த்தபோது பல்வேறு முரண்பாடுகள் இருப்பதாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
குறிப்பாக, கடந்த பொதுத்தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் தனது வயது 44 எனக் குறிப்பிட்டிருந்த மரகதம் குமரவேல், சில மாதங்களுக்குப் பிறகு தாக்கல் செய்துள்ள புதிய பிரமாணப் பத்திரத்தில் தனது வயது 43 எனக் குறிப்பிட்டுள்ளதாக காங்கிரஸ் நிர்வாகி குற்றம்சாட்டியுள்ளார். குறுகிய கால இடைவெளியில் வயது விவரத்தில் மாற்றம் ஏற்பட்டிருப்பது குறித்து தேர்தல் அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதேபோல், மரகதம் குமரவேல் மற்றும் அவரது கணவரின் வருமான வரிக் கணக்கு தொடர்பான விவரங்களிலும் பல லட்சம் ரூபாய் அளவுக்கு முரண்பாடுகள் இருப்பதாக புகாரில் கூறப்பட்டுள்ளது. முந்தைய பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டிருந்த 2025-26 நிதியாண்டுக்கான வருமான விவரங்கள் தற்போதைய பிரமாணப் பத்திரத்தில் இடம்பெறவில்லை என்றும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
மேலும், முந்தைய பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டிருந்த சில வங்கிக் கணக்கு விவரங்கள் தற்போதைய ஆவணத்தில் விடுபட்டுள்ளதாகவும், வேட்பாளரின் கணவருக்கு கரூர் வைஸ்யா வங்கியில் இருந்ததாகக் கூறப்படும் ரூ.19 லட்சம் கடன் விவரமும் குறிப்பிடப்படவில்லை என்றும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இவ்வாறு மொத்தம் 11 வகையான விதிமீறல்கள் மற்றும் தகவல் முரண்பாடுகள் இருப்பதாக காங்கிரஸ் நிர்வாகி தனது மனுவில் சுட்டிக்காட்டியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வாக்குப்பதிவுக்கு மிகக் குறுகிய காலமே உள்ளதால், தேர்தல் அதிகாரிகள் இந்த விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு ஆவணங்களை ஆய்வு செய்து உண்மை நிலையை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், தகவல்களை தெரிந்தே மறைத்திருந்தால் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951-ன் பிரிவு 125A-ன் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புகாரில் கோரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும், இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக தேர்தல் அதிகாரிகளின் விசாரணை அல்லது அதிகாரப்பூர்வ முடிவு வெளியாகிய பின்னரே புகாரில் கூறப்பட்டுள்ள தகவல்களின் சட்டரீதியான நிலை தெளிவாகும்.
இதற்கிடையே, தவெக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் நிர்வாகி ஒருவரே அக்கட்சியின் வேட்பாளர் மீது தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது. கூட்டணியில் இருக்கும் நிலையில் தங்கள் வேட்பாளருக்கு எதிராக புகார் அளிக்கப்பட்டிருப்பது தவெக தரப்பினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
மதுராந்தகம் தொகுதியில் நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், மரகதம் குமரவேலின் வேட்புமனு தொடர்பாக எழுந்துள்ள இந்த புகார் தேர்தல் களத்தில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புகாரில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து தேர்தல் அதிகாரிகள் எத்தகைய நடவடிக்கை எடுக்கப் போகிறார்கள் என்பது தற்போது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Complaint filed with the Election Commission against Maragatham Kumaravel Congress engages in internal sabotage within the alliance TVK furious